அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Friday, January 8, 2016

முன்னறிவிப்புகள் ஏன் நீங்குகின்றன?

நீங்கக் கூடிய முன்னறிவிப்புகள் பல வகையில் உள்ளன.

1. தான் கடந்து செல்லும் நிலைமைகளின் விளைவு பற்றி மனிதனுக்கு அறிவிக்கப்படுகிறது.

அதாவது சாதாரண விதியின் கீழ் என்ன விளைவுகள் ஏற்படவிருக்கின்றனவோ அவற்றை தெரிவித்தல், உதாரணமாக பிளேக் நோய்க் கிருமிகள் இருக்கின்ற ஓரிடத்திற்கு ஒருவர் செல்கிறார். அந்நோய்க் கிருமிகள் தொற்றிக் கொள்ளும் வகையில் அவரது உடலமைப்பு உள்ளது. அதன் தீய விளைவுகளிலிருந்து காத்துக் கொள்ள ஒரு பொருளும் அவருக்கு இல்லாதிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்போது அவருக்கு பிளேக் நோய் ஏற்பட்டுவிட்டதாக இறைவன் அவருக்குக் (கனவில்) காட்டுவான். அதனால் அவர் இக்காட்சியைக் கண்ட பிறகு பிளேக் நோய் பரவியுள்ள இடத்திற்கு செல்வதை தவிர்த்து விடுவார். அல்லது அந்த இடத்தில் இருந்தாலும் கூட நோயிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். அவர் அப்படிச் செய்தால் பிளேகிலிருந்து தப்பித்துவிடுவார். மேலும் அவருடைய ருஹ்யா (ஆன்மீகக் காட்சி) பொய்யானதாகிவிடாது; முற்றிலும் உண்மையானதாகவே இருக்கும்.

2. இவ்வாறும் நடக்கலாம்; மனிதனின் ஆன்மீக, நல்லொழுக்க நிலைமைகளுக்கேற்ப வெளிப்படவிருக்கும் சிறப்புவிதி குறித்து அறிவிக்கப்படுகிறது.

3. தக்தீரே முப்ரம் எனும் நீங்காத விதி குறித்து அறிவிக்கப்படுதல்.

இம்மூன்றில் முதல் இருவகை தக்தீரும் பெருமளவில் மாறிவிடுகின்றன. ஆனால் மூன்றாவது வகை மாறுவதில்லை. ஆயினும் எப்போதாவது சில குறிப்பிட்ட நிலைமைகளில் அதுவும் மாறிவிடுகிறது.

முதல் வகை தக்தீர் ஏன் மாறுகிறது? எவ்வாறு மாறுகிறது? என்று இப்போது கூறுகிறேன். இறை நியதி வெளிப்படுவதற்குப் பெயர்தான் முன்னறிவிப்பு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வேறு வகையில் கூறுவதாயின் ஒருவருடைய இயற்கை நிலைமை, மார்க்க நிலைமை ஆகியவற்றிற்கேற்ப அவருடன் நடந்து கொள்ளும் பரிமாற்றத்தை வெளிப்படுத்துவதையே முன்னறிவிப்பு என்கிறோம். இவ்வுண்மையைக் கருத்தில் கொண்டு இப்போது முதல் வகை முன்னறிவிப்பைப் பாருங்கள். அதாவது, ஒருவருக்கு அவருடைய இயற்கை நிலைமைகளின் முடிவை எடுத்துக் கூறுவது. உதாரணமாக, இப்போதைய அவருடைய உடல் நிலைமையைப் பொறுத்தவரை அதன் முடிவு மரணம்தான். இதுபற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டு, அதனால் அவர் தன் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட்டு பேணுதலாக நடக்கத் துவங்கிவிட்டால் அதன் பின்விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்வாரா இல்லையா? கண்டிப்பாகத் தப்பித்துக் கொள்வார்.

பொதுவான விதியின் கீழ் நடக்கவிருக்கும் சம்பவங்கள் சிறப்பு விதியினாலும் மாறிவிடுகின்றன. ஆகவே பொதுவிதிக்கேற்ப அறிவிக்கப்பட்ட முனன்றிவிப்பு சிறப்பு விதியினாலும் நீங்கிவிடக் கூடும். உதாரணமாக உங்கள் வீட்டில் மரணம் ஏற்படும் என ஒருவருக்கு அறிவிக்கப்படுகிறது. ஆனால் அவர் குறிப்பாகவும் சிறப்பாகவும் சதகா (தானதருமங்கள்) மற்றும் துஆ செய்கிறார் எனில் அந்த மரணம் தள்ளி போடப்படும்.

இப்படிப்பட்ட முன்னறிவிப்புகளுக்கு உதாரணம் பழக்கமில்லாத குண்டும் குழியுமாக உள்ள ஓரிடத்திற்கு இருளில் செல்லும் ஒருவரைப் போன்றதாகும். எதிரே படுகுழி ஒன்று இருக்கிறது. அவர் நேராக தொடர்ந்து சென்று கொண்டிருந்தால் அக்குழியில் செல்வது நிச்சயம். ஆனால் விஷயம் தெரிந்த ஒருவர் அவரிடம், நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? கீழே விழுந்து விடுவீர்கள் என்றோ அல்லது உங்களுக்கு மரணம் வந்துவிட்டது என்றோ கூறிவிடுகிறார். இதனைக் கேட்ட அவர் பள்ளம் வரை சென்று திரும்பி வந்து எச்சரித்தவரிடம் ‘நீங்கள் பொய் கூறினீர்கள். நான் விழவில்லையே, மரணிக்கவில்லையே என்று கூறினால் அதற்கு எச்சரித்தவர், ‘நீங்கள் சென்றிருந்தால் விழுந்திருப்பீர்கள்; நீங்கள் செல்லவே இல்லையென்றால் எப்படி விழுவீர்கள்? என்றே பதில் கூறுவார். மற்றவர்களும் அவரிடம், ‘நீ எச்சரித்தவரையே பொய்யர் என்கிறாயா? உன் உயிரைக் காப்பாற்றியதால் பழியை அவரின்மீது சுமத்துகிறாயா?’ என்றே தூற்றுவார்கள். இதுதான் சாதாரனவிதி இன்னொரு சாதாரனவிதியால் மாறிவிடுவதற்கான உதாரணமாகும்.

சிறப்பு விதிக்கு உதாரணம், அங்கே செல்லாதே; நீ விழுந்து விடுவாய் அல்லது மரணித்து விடுவாய் என எச்சரித்தவரிடம் இரண்டாமவர், ‘நான் அவசியம் போக வேண்டும். தயவு செய்து ஏதாவது உதவி செய்ய முடியுமானால் செய்யுங்கள்’ என்று கூறுகிறார். உடனே எச்சரித்தவர் ஒரு பெரிய மரப்பலகையை அக்குழியில் வைத்து விடுகிறார். இதன்காரணமாக அந்த நபர் அதனைக் கடந்து செல்கிறார். இப்போது எச்சரித்தவரை நோக்கி, நீர் பொய் சொன்னீர்; இந்த மனிதர் குழியில் விழாமல் சுலபமாக கடந்து சென்று விட்டார் என்று எவராவது கூறமுடியுமா? கூறமுடியாது. ஏனெனில் அம்மனிதர் எச்சரிக்கவில்லை என்றால் இருட்டில் சென்று பள்ளத்தில் விழுந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை; மேலும் அவர் உதவி செய்யவில்லை என்றால் அம்மனிதரால் பள்ளத்தைக் கடந்து சென்றிருக்க முடியாது.

இதைப் போன்றே அல்லாஹ்வும் சில நேரங்களில் இவருக்கு இன்ன கஷ்டம் வரப்போகிறது என்று அறிவிக்கிறான். அவருடைய தற்போதைய நிலைமைக்கு இன்ன விளைவு ஏற்படப்போகிறது என சம்பந்தப்பட்டவரை எச்சரிப்பதே அதன் நோக்கம். அவர்கள் அந்நிலைமையை மாற்றிவிட்டால் அல்லது அதனை மாற்றுவதற்காக அல்லாஹ்விடம் பணிந்து துஆச் செய்தால் அந்த கஷ்டங்கள் நீங்கிவிடுகின்றன. அதனால் அந்த முன்னறிவிப்பு பொய்யானது என எந்த அறிவாளியும் கூறமாட்டார். இறைவன் மீது பொய்யையும் கூறமாட்டார்.

இன்னொரு முன்னறிவிப்பு எப்படிப்பட்டதென்றால் அதில் சிறப்பு விதியைப் பற்றி ஒரு அடியாருக்கு அறிவிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மனிதர் அளவுக்கு மீறி தீங்கு செய்கிறார். மக்கள் அவரது தீங்குகளினால் அவதிக்குள்ளாகிறார்கள். அவரது தீங்குகளுக்குரிய தண்டனை அவருக்கு இவ்வுலகிலேயே கிடைக்க வேண்டும் என விரும்பிய இறைவன் வருடைய உயிர் பொருளுக்கு நாசத்தை உண்டாக்குமாறு அல்லது அவரது மதிப்பு மரியாதையை அழித்துவிடுமாறு வானவர்களுக்குக் கட்டளை இடுகிறான். இக்கட்டளையை குறித்து இறைவன் சிலவேளை தனது ஏதாவதொரு அடியாருக்கும் கொடுத்து விடுகிறான்.

இந்தச் செய்தியைக் கேட்டு அந்த துஷ்டமான மனிதர் தன் உள்ளத்தில் ஒரு மூலையில் இறையச்சம் எனும் நெருப்பு பாவங்கள் எனும் சாம்பலுக்குக் கீழே இருந்ததால் பயந்து தன் நிலைமைகளை பார்வையிடுகிறார். அப்போது அவர் நெருப்பின் வெப்பத்தை உணர்கிறார். மேலும் அதனை அவர் சாம்பலின் கீழிருந்து வெளியிலெடுத்துப் பார்க்கின்றார். அந்த நெருப்பு சாம்பலிலிருந்து வெளிப்பட்டு வெளிச்சத்தையும் வெப்பத்தையும் அதிகரிக்கிறது. அந்த மனிதனுடைய உள்ளத்திற்கு புத்துயிரூட்டுகிறது. சில நாட்களுக்கு முன் மோசமானவராகவும், குழப்பக்காரனாகவும் இருந்த அவர் தன்னகத்தே அன்பு மற்றும் இறையச்சத்தை உணர தலைப்படுகிறார். மேலும் தனது சென்ற கால செயல்களுக்காக வருந்தி இறைவன் முன்னிலையில் சிரம் தாழ்த்தி விடுகிறார். வெட்கம் எனும் கண்ணீரினால் அதனை கழுவுகின்றார். அளவிலா கருணை காட்டுபவனும் மென்மேலும் அருள் செய்பவனுமாகிய இறைவனுக்கு அந்த மனிதரின் இந்நிலைமையைக் கண்டு இரக்கம் வருமா? வராதா? அந்த மனிதனின் முதல் நிலைமைக்கு அவசியமாயிருந்த அந்த தீர்ப்பை தற்போதைய புதிய நிலைமைக்கேற்ப மாற்றமாட்டானா இல்லையா? அவன்மீது கருணை கொண்டு அவனுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்ற கட்டளையை மாற்றுவானா? அல்லது நான் என் தீர்ப்பை என் அடியாருக்கு அறிவித்து விட்டேன். எனவே இவர் இனி எவ்வளவுதான் பாவமன்னிப்புக் கோரினாலும் நான் அந்தக் கட்டளையை மாற்ற மாட்டேன் என்று கூறுவானா?

இறைவன் தனது தீர்ப்பை வெளியிடாமளிருந்தால் இஸ்லாமிய போதனையின்படி அந்த தீர்ப்பை மாற்ற முடியாதா என்ன? அவன் தன் சுன்னத்தின்படி (நடைமுறையின் படி) அதனை மாற்றிவிடுகிறான். ஆக, அவன் தன் தீர்மானத்தை மாற்ற முடியும்; மாற்றுகிறான். அப்படியிருக்கும்போது அவன் தன் தீர்மானத்தை வானவர்களுக்கு மட்டுமில்லாது ஒரு மனிதனுக்கு தெரிவித்து விட்டான். மேலும் அவர் மூலம் மற்ற மக்களுக்கு செய்தி கிடைத்துவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக இரக்கம் காட்டாது விட்டு விடுவானா?

இறைவன் தன் தீர்ப்பை மாற்றி விட்டால் அவன் பொய் கூறினான் (நவூது பில்லாஹ்) என்று எந்த மனிதனாவது கூறமுடியுமா? வேலைக்காரனின் தவற்றை கண்ட முதலாளி, நான் உன்னை அடிப்பேன் என்று கூறுகிறார். இதனைக் கேட்ட வேலைக்காரன மிகவும் வெட்கமடைகிறான்; மன்னிப்புக் கோருகிறான். இனி திருந்தி விடுவேன் என வாக்குறுதி கொடுக்கிறான். இதனால் அந்த முதலாளி அவனை மன்னித்து அடிக்கவில்லை என்பதால் அந்த முதலாளி பொய் சொன்னார்; வாக்குத் தவறிவிட்டார் என அறிவுள்ள ஒருவர் கூறுவாரா?

முதல் வகை முன்னறிவிப்புகள் – அதாவது பொதுவான இறை நியதியின் அடிப்படையில் ஏற்படவிருக்கும் விளைவுகள் குறித்து அறிவிக்கப்படும் முன்னறிவிப்புகள் பெரும்பாலும் நம்பிக்கையாளர்களுக்கே ஏற்படுகின்றன. அல்லாஹ் அவர்களை எச்சரித்து பூமியில் நிகழவிருக்கும் ஆபத்துகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றி அவர்கள் மீது தன் கருணையை முழுமைப் படுத்துவதற்காகவுமே அல்லாஹ் அவ்வாறு (முன்னறிவிப்பு) செய்கிறான். ஏனெனில் இறைநம்பிக்கையாளர் இயற்கை விதிகளின் பின்விளைவுகளுக்கு அப்பாற்பட்டவரல்லர். அறியாமையினால் பலமுறை அதில் சிக்குண்டு போகிறார். மேலும் இயற்கைச் சட்டங்களை முறிப்பதால் கஷ்டங்களில் சிக்கிக் கொள்கிறார். அப்போது இறைவன் தீமை பயக்கும் விளைவுகள் ஏற்படுவதற்கு முன்னரே அவருக்கோ அல்லது வேறொரு நம்பிக்கையாளருக்கோ உண்மை நிலையினை அறிவித்து விடுகிறான். அதனால் அவர் இயற்கை சட்டத்தின் மூலமாகவோ அல்லது துஆ மற்றும் சதகா (தானதருமங்கள்) மூலமாகவோ அதிலிருந்து தற்காத்துக் கொள்கிறார்.

இரண்டாம் வகை முன்னறிவிப்புகள் அதாவது சிறப்பு விதியின் மூலமாக ஒருவரைப் பற்றி கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இவை குறிப்பிட்ட வரம்பு மீறியவர்கள், குழப்பவாதிகளுக்கு ஏற்படுகிறது. அதற்க்குக் காரணம் என்னவென்றால், அந்த விதியின் மூலமாக வெளியாகும் நீங்கிவிடக்கூடிய முன்னறிவிப்பு எப்பொழுதும் தண்டனைப் பற்றியதாக இருக்கும். ஏனெனில் தண்டனைப் பற்றிய முன்னறிவிப்புதான் எப்பொழுதும் நீங்கக் கூடியதாக இருக்கிறதே தவிர வாக்குறுதியைப் பற்றிய முன்னறிவிப்பு நீங்கக் கூடியதல்ல. தண்டனை பற்றிய முன்னறிவிப்பு நீங்குவது கருணையினால் ஆகும். மேலும் தனால் இறைவனின் மகிமை வெளிப்படுகிறது. ஆனால் நம்பிக்கையாளர்களுக்கு வெளிப்படும் சிறப்பு விதி வாக்குறுதியாக இருப்பதால் அவை மாறுவதில்லை. காரணம் அவை மாறுவதால் இறை மகிமை வெளிப்படுவதில்லை. இதற்க்கு இன்னொரு காரணம் எச்சரிக்கை வகையிலான முன்னறிவிப்பு எப்பொழுதும் ஏதாவதொரு காரணத்தால் ஏற்படுகிறது. அந்தக் காரணம் மாறினால் முன்னறிவிப்பு சில நேரத்தில் காரணமின்றியும் ஏற்படுகிறது. எனவே அது நீங்குவதில்லை. ஏனெனில் எச்செயலுமின்றி தானாகவே மனமுவந்து கொடுப்பதாக வாக்குறுதி கொடுப்பதை இன்னொரு காரணத்தினால் தடுத்துவிடுவது என்பது இறைவனின் மகிமைக்கு எதிரானதாகும்.