அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Friday, December 11, 2015

விதி பற்றி வாக்குவாதம் செய்தல்


தக்தீர் மீது ஈமான் கொள்ளுதல் எவ்வளவு அவசியமென்றால், அதன் மீது நம்பிக்கை கொள்ளாதவரை ஒருவர் நம்பிக்கையாளராகவே ஆக மாட்டார் என்று ஒருபுறம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது வெறும் அழுத்தம் கொடுப்பதற்காக மட்டும் கூறவில்லை. மாறாக, இறை பண்புகளின் மீது ஈமான் கொள்ளுதல் ஈமானின் ஒரு பகுதியாகும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அத்துடன் மறுபுறம் இன்னொரு கடினமான விஷயமும் உள்ளது. அதாவது, விதியின் மீது ஈமான் கொள்வது எவ்வளவு கடினமானதென்றால், அது பற்றி வாக்குவாதம் செய்தல் மனிதனை அழிவுக்குள்ளாகி விடுகிறது என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள்
கூறுகிறார்கள்.  ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,

“நாங்கள் விதி பற்றி வாதித்துக் கொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். எங்களுடைய வாதங்களைக் கேட்டு அவர்களின் திருமுகம் சிவந்தது. எதுவரை என்றால், அவர்களின் முகத்தில் மாதுளம் பழத்தை உடைத்தது போன்று தென்பட்டது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கு இது குறித்து கட்டளையிடப்பட்டுள்ளதா? இறைவன் என்னை இதற்காகவா அனுப்பியுள்ளான்? உங்களுக்கு முன்னுள்ள சமுதாயங்கள் ‘விதி’யின் மீது வாக்குவாதம் செய்ததனாலேயே அழிவுக்காளாயின. நான் உங்களுக்கு வலியுறுத்திக் கட்டளையிடுகிறேன். ஆம் நான் உங்களுக்கு வலியுறுத்திக் கட்டளையிடுகிறேன். இதுபற்றி சண்டையிடுதல், வாக்குவாதம் செய்தல் ஆகியவற்றை விட்டு விடுங்கள் எனக் கூறினார்கள்.” (ஜாமிவுத் திர்மிதி அதிகாரம் : அல் கத்ர்)

அவ்வாறே இன்னொரு ஹதீஸில் இவ்வாறு வருகிறது:

ஹஸ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, உங்களுக்கு ஒருவர் ஸலாம் கூறினார் என்று சொன்னார். இதனைக் கேட்ட ஹஸ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அந்த மனிதர் இஸ்லாத்தில் சில பித்அத்துகளை ஏற்படுத்தியிருப்பதாக நான் அறிகிறேன். இது உண்மைஎன்றால், என் தரப்பிலிருந்து அவருடைய ஸலாத்திற்கு பதில் கூற வேண்டாம். ஏனெனில், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், தமது உம்மத்தில் தலைவிதி (தக்தீர்) பற்றி தர்க்கம் செய்கின்ற சிலர் மீது தண்டனை இறங்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் எனக் கூறினார்கள் (திர்மிதி அதிர்காரம் : அல் கத்ர்)

‘கத்ர்’ என்பது ஒரு கடினமான விவகாரம் என்பதும், அது குறித்து வாக்குவாதம் செய்வதால் ஈமான் போய் விடக் கூடிய அபாயம் உண்டு என்பதும் இந்த நபிமொழிகளிலிருந்து தெரிய வருகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்த சமுதாயத்தில் ஒரு பிரிவினரின் மீது இதன் காரணத்தால் தண்டனை வரும் என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் முன்னரிவித்துள்ளார்கள். ஆனால் அதே சமயத்தில் இந்த விவகாரத்தின் மீது ஈமான் கொள்ள வேண்டும் என்றும் உறுதியாகக் கட்டளையிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ‘காபிர்கள்’ என கூறப்பட்டுள்ளார்கள். மேலும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் அதன் மீது ஈமான் கொள்வதென்பது முடியாத ஒன்று. ஏனெனில், தான் எதன் மீது ஈமான் கொள்ள வேண்டும் என்பதே ஒருவருக்கு தெரியாதபோது அவர் எப்படி ஈமான் கொள்வார்? புரிந்து கொள்ள முடியாத ஒன்றின் மீது மனிதனை ஈமான் கொள்ள வைப்பதால் அவனுக்கு என்ன பயன் கிடைக்க முடியும்?

எனவே இறை நியதி பற்றி நாம் மிக எச்சரிக்கையா இருக்க வேண்டும். இதுபற்றி வாக்குவாதம் செய்வதிலிருந்து ஷரீஅத் தடுத்துள்ளதென்றல் அதன் பொருள் என்ன? அதன் மீது ஈமான் கொள்ள வேண்டும் என்ற கட்டளையிருக்கிறதென்றால் அதற்கென்ன பொருள்? என்பதை நாம் சிந்தித்துணர வேண்டும். இதனைப் பொருட்படுத்தாததன் விளைவாக அழிவுக்கும் நாசத்திற்கும் ஆளாகி விடக் கூடாது.

இந்த விவகாரம் உண்மையில் உலகத்தில் உள்ள ‘புலே சிராத்’ (நேரான பாலம்) எனலாம். அதில் கால் வைக்காவிட்டால் சுவர்க்கத்தை இழந்து விடலாம்: கால் வைத்தால் (பாலம்) உடைந்து நரகத்தின் படு குழியில் விழுந்து விடக் கூடாதே என்ற பயமும் ஏற்படுகிறது. ‘புலே சிராத்’ என்றழைக்கப்படும் பாலத்தைக் கடக்காமல் எந்த மனிதனும் சுவர்க்கத்தில் நுழையவே முடியாது. அதைக் கடந்து செல்வதில் இரு வித சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. ஒன்று கீழே விழுந்து விடலாம் அல்லது தப்பித்து விடலாம். இது போன்றே தக்தீர் பற்றிய விவகாரத்தின் நிலையும், இதனை புரியவில்லையாயின், ஈமான் முழுக்க முழுக்க போய்விடும். இது குறித்து வாதித்தால், இரண்டும் நடக்கலாம். ஒன்று சரியான முறையில் புரிந்து இறை நெருக்கத்தைப் பெறலாம் அல்லது இதனைப் புரிவதில் தவறிழைத்து அழிவுக்கும் நாசத்திற்கும் ஆளாகலாம்.

அப்படியானால் இதுகுறித்து வாதம் செய்யாதீர்கள் என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஏன் கூறினார்கள் என்ற கேள்வி இங்கு எழுகிறது. இதற்குரிய விடை, முற்றிலும் வாதம் செய்யாதீர்கள் என்று அதற்குப் பொருளல்ல. இது விஷயத்தில் யுகங்களை கைக்கொள்ளாதீர்கள். இந்த விவகாரத்தை எப்பொழுதும் ஷரீஅத்தின் ஒளியில் சீர்தூக்கிப் பாருங்கள் எனபதே அதற்குப் பொருள்.

அவ்வாறில்லையென்றால் இந்த விவகாரம் பற்றி பல்வேறு நேரங்களில் விளக்கமாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்க மாட்டோம். அவர்கள், தாமே இந்த விவகாரம் பற்றி விளக்கியிருப்பதும், இது குறித்து எழுகின்ற ஆட்சேபணைகளுக்கு விடை கூறியிருப்பதும், திருக்குர்ஆன் இது பற்றி விளக்கமாக எடுத்துரைத்திருப்பதும் தெரிவிப்பது என்னவென்றால், தடுக்கப்பட்டது தக்தீர் பற்றிய ஆய்வு அன்று, மாறாக ஷரீஅத்தின் துணையின்றி இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதே தருக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தீர்வு காண்பதால் நாத்திகமும், மார்க்கத்தை இழக்கும் அபாய நிலையும் தவிர வேறெந்த விளைவும் ஏற்படுவதில்லை.

விதி எனும் கத்ர் விவகாரம் இறைவனுடைய பண்புகளோடு தொடர்புடையதாகும், எனவே எவராவது இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முடியுமென்றால் அது அல்லாஹ்தான். எனவே, இறைவனையும், இறை தூதரையும் தவிர வேறு எவராலும் இந்த விவகாரத்தின் உண்மை நிலையை எடுத்துரைக்க முடியாது. ஆறுமாத அல்லது ஒரு வருட குழந்தை ஒரு பயங்கரமான காட்டில் செயலற்றிருப்பது போலவே அறிவு இந்த களத்தில் செயலற்றிருக்கிறது. அதனை அந்த காட்டிலிருந்து ஒன்று வெளியேற்ற முடியுமென்றால் அது ஷரீஅத்தின் வழிகாட்டல்தான். இந்த விவகாரத்தை அறிவால் புரிந்து கொள்ளவே முடியாது என்பது என் கருத்தன்று: மாறாக, ஷரீஅத்தின் வழிகாட்டலின்றி அறிவு இந்த விவகாரத்தை புரிந்து கொள்ள முடியாது என்பதே என் கருத்தாகும். அல்லாஹ் விளக்குவதனால் – அவனுடைய வழிகாட்டலால் அறிவு இந்த விவகாரத்தை நன்றாக புரிய முடியும். அல்லாஹ்வின் வழிகாட்டலினாலும் மனித மூளை அதனைப் புரிய முடியாது என்றால் பிறகு அதன் மீது நம்பிக்கை கொள்ளும்படி கட்டளையும் வந்திருக்காது.

எவர்கள் இந்த விவகாரத்திற்கு அறிவின் மூலமாக தீர்வு காண விரும்பினார்களோ அவர்கள் மாபெரும் பயங்கரமான வழிகேடுகளுக்கு பலியானார்கள்; பிறரையும் வழி கெடுக்கக் காரணமானார்கள்.