அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Sunday, January 3, 2016

விதி மாறுமா?

விதி மாறுமா? என்பதற்கு தற்போது விடையளிக்கிறேன். ஆம் விதி மாறலாம் என்பதே இதற்குரிய சுருக்கமான விடையாகும்.

தக்தீர் என்றால் ‘தீர்ப்பு’ என்று பொருள். மேலும் எவர் தீர்ப்பு வழங்குவாரோ அவரால் அந்த தீர்ப்பை மாற்றவும் முடியும். தீர்ப்பு வழங்கியபின் அதனை மாற்ற முடியாமலிருப்பது பலவீனத்தின் அறிகுறியாகும். அது இறைவனிடத்தில் இருக்க முடியாது.

விதி எவ்வாறு நீங்குகிறது?

தக்தீர் (இறை நியதி) எவ்வாறு நீங்க முடியும் என்பது பற்றி நான் இப்போது கூறுகிறேன்.

முதலில், சாதாரண இயற்கை விதி, மற்றொரு சாதாரண இயற்கை விதியினால் நீங்கி விடக் கூடும். உதாரணமாக, தீ பட்டால் துணி எரிந்து விடும் என்பது சாதாரண இயற்கை விதி. அப்போது ஒரு துணியை எரிப்பதால் அது எரிகியது என்றால், சாதாரண இயற்கை விதி அதில் ஏற்பட்டுவிட்டது என்று கூறப்படும். ஆனால் அதே சமயத்தில் இன்னொரு ‘விதி’யும் உண்டு. அதாவது, நெருப்பின் மீது நீரை ஊற்றினால் அது அந்த நெருப்பை அனைத்து விடுகிறது. இவ்வாறு ஒரு சாதாரண இயற்கை விதி இன்னொரு சாதாரண இயற்கை விதியை அகற்றிவிடுகிறது.

ஆகவே, சாதாரண விதி நீங்க முடியும். அதுவும் அந்த சாதாரண விதிக்கு நேர் எதிராக மற்றொரு விதியை பயன்படுத்தி அதனை அழித்து விடுவதன் மூலம் நீங்கலாம்.

இவர்கள் கொடுத்த உதாரணத்தின் மூலம் தத்பீர் (முயற்சி) தக்தீரை (விதியை) மாற்றியுள்ளது என்பதுதான் தெரியவருகிறதே தவிர ஒரு தக்தீர் இன்னொரு தக்தீரை மாற்றியதாக வரவில்லையே? ஏனெனில் நீரை மனிதன்தானே ஊற்றுகிறான் என்று எவராவது கூறுவாராயின், நீரை மனிதன் ஊற்றுகிறான் என்றால், நெருப்பையும் சில நேரங்களில் மனிதன் அறிந்தோ அறியாமலோ ஏற்படுத்தி விடுகிறான். எனவே முதலில் உள்ள செயலை ‘தக்தீர்’ (நியதி) என்று கூறுவதைப் போலவே இரண்டாவது செயலை தக்தீர் என்று கூறுகிறோம்.

இன்னொரு விஷயம் என்னவெனில், ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மனிதனுடைய செயல் தக்தீர் ஆகவே முடியாது. (நாம் குறிப்பிட்டுள்ள சில சூழ்நிலைகளிலேயே தவிர). நெருப்பு எறிதல், மற்றும் நெருப்பு அணைதல் என்று நாம் கூறியதன் கருத்து அதனை மனித செயலின் பக்கம் சுட்டிக் காட்டுவதன்று. மாறாக எறிதல் மற்றும் அணைதல் என்ற தன்மையை சுட்டிக் காட்டுவதாகும். (அதாவது நெருப்பினால் எரிப்பதும், நீரினால் அணைப்பதும் மனிதன்தான் என்றாலும் அந்த தன்மையை அதில் உருவாக்கியது மனிதன் அல்ல.) ஆகவே ஒரு தக்தீர் (இறை நியதி) இன்னொரு தக்தீரை (இறை நியதியை) மாற்றிவிட்டது என்று கூறுவதே சரியானது. அவ்வாறில்லாமல் இறைவன் எரியக் கூடிய தன்மையை நெருப்பில் வைக்காவிட்டால் ஒரு பொருளை யாரால்தான் எரித்துவிட முடியும்? அவ்வாறே நீரில், அணைக்கும் தன்மையை இறைவன் வைத்திருக்காவிட்டால், அதன் மூலம் யார் நெருப்பை அனைத்து விட முடியும்?

இதே போன்று இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள் ஒருவர் அதிகமாக மிளகாய் சாப்பிடுகிறார். அது அவரது குடலைத் தின்று விடுகிறது. குடலில் எரிச்சலை உருவாக்கிவிடுகிறது. இது தக்தீர் ஆகும்.

இதற்கு எதிராக அவர் இன்னொரு தக்தீரின் (இறைநியதியின்) மூலம் பயன் பெறுகிறார். அதாவது, நெய் அல்லது வேறு ஏதாவது கொழுப்பு உணவை உட்கொள்கிறார். அதனால் அரிப்பு நீங்கி, சுகம் பெறுகிறார். இது முதல் தக்தீரை அழித்து விடுகிறது.

இதை விட மேலான ஓர் உதாரணம் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவமாகும். அப்போது இஸ்லாமிய படையில் பிளேக் நோய் பரவியது. அந்தப் படையின் தளபதியான ஹஸ்ரத் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் நோய்கள் இறைவனுடைய விதியின்படியே வருகின்றன எனக் கருதினார்கள். இதனால் அந்நோயிலிருந்து தப்பிப்பதற்கான வழி முறைகளைக் கையாள்வதையும் அவர்கள் அவ்வளவு முக்கியமானதாகக் கருதவில்லை. ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் அப்படையை நோக்கிச் சென்றதும், முஹாஜிரீன் மற்றும் அன்ஸார் சகோதரர்களின் ஆலோசனைகளின்படி அவர்களைத் திரும்பி விடுமாறு கூறினார்கள். அப்போது ஹஸ்ரத் அபூ உபைதா (ரலி) (அஹ்பிராரும் மின் கத்ரில்லாஹ்) என்று கேட்டார்கள் அதாவது உமர் அவர்களே! தாங்கள் அல்லாஹ்வின் தக்தீரிலிருந்து வெருண்டோடுகின்றீர்களா? என்று கேட்டார்கள். அதற்க்கு ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள், ‘நஅம் நஹ்பிர்ரு மின் கத்ரில்லாஹி ‘ஆம்! நாம் இறைவனுடைய தக்தீரிலிருந்து வெருண்டோடி இறை தக்தீரின் பக்கமே செல்கின்றோம்’ என்று பதிலளித்தார்கள். இது முஸ்லிம்களுக்கு ஒரு துஆவில் கற்றுக் கொடுக்கப்பட்ட அதே கருத்துதான். இந்த துஆவை ஒவ்வொரு முஸ்லிமும் தூங்குவதற்கு முன்னர் ஓதவேண்டும்; அதற்குப் பிறகு எதுவும் பேசக் கூடாது. அந்த துஆவில் வருவதாவது

(லா மல்ஜஅன் வலா மன்ஜா மின்கா இல்லா இலைக)

பொருள்: எங்கள் இறைவா! உன்னுடைய கோபத்திலிருந்து தப்பிப்பதற்கும், அதிலிருந்து அடைக்கலம் பெறுவதற்கும் உன்னுடைய சந்நிதானத்தை தவிர வேறு எந்த இடமும் இல்லை.

ஒரு தக்தீரை விடுத்து மற்றொரு தக்தீரின் பக்கம் செல்வதன் உதாரணம், ஒரு கை வெறுமையாகவும் மற்றொரு கையில் உணவும் இருக்கின்ற ஒருவரைப் போன்றதாகும். அவர் வெறுமையான கையை விட்டுவிட்டு மற்றொரு கையின் பக்கம் செல்லும் போது நீங்கள் இந்தக் கையிலிருந்து வெருண்டோடுகின்றீர்களா? என்று ஒருவர் அவரிடம் கேட்டால், நான் இதிலிருந்து ஓடவில்லை; மாறாக, மற்றொரு கையின் பக்கம் கவனம் செலுத்தினேன் என்றுதான் பதில் கூறுவார்.

(2) சாதாரண இயற்கை விதி இன்னொரு சாதாரண இயற்கை விதியால் நீக்கப்படுவதைப் போன்றே சாதாரண இயற்கை விதியை சிறப்பான இயற்கை விதியைக் கொண்டும் நீக்க முடியும்.

ஒருவருக்கெதிராக உலகியில் காரணிகள் ஒன்று சேர்கின்றன. அவரால் அதனைச் சமாளிக்க முடியாது என்றாலும் அந்த மனிதர் இறைவனுடைய அருளைக் கவர்ந்து இறைவனின் சிறப்பான விதியின் மூலம் அதனை சமாளித்து நீக்கி விடமுடியும். எடுத்துக் காட்டாக, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் சம்பவம், நெருப்பு, எரிக்க வேண்டும் என்பதுதான் சாதாரண விதி, ஆனால் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக சிறப்பு தக்தீர் (விதி) வெளியானது. எனவே நெருப்பால் அவர்களை எரித்து விட முடியவில்லை; நெருப்பின் தீங்கிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார்.

அவ்வாறே கொலையுண்டு போகும் தன்மை மனிதனுக்கு இருக்கிறது. இது சாதாரண விதியாகும். எனினும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இறைவன், “மேலும் அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்’ என்று கூறியுள்ளான் (5:68) எனவே அவர்களை உலகத்தால் கொலை செய்யவே முடியாது. ஏனெனில் சாதாரண விதியை சிறப்பு விதி மாற்றி விட்டது. இவ்வாறு ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட இமாம் மஹ்தி (அலை) அவர்களுடனும் நடந்ததது.

(3) சாதாரண இயற்கை விதி மற்றொரு சாதாரண இயற்கை விதியாலும், சிறப்பான இயற்கை விதியாகும் நீன்க்வதைப் போன்றே சிறப்பான இயற்கை விதி மற்றொரு சிறப்பான இயற்கை விதியால் நீங்கலாம். எவ்வாறென்றால், ஒருவருடைய சில குறிப்பிட்ட நிலைமைகளுக்கேற்ப அவருக்கு குறிப்பிட்ட ஒரு கட்டளையிடப்படுகிறது. பின்னர் அவர் தன்னிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். அதனால் அந்தக் கட்டளையும் மாற்றப்படுகிறது.

உதாரணமாக, ஒருவர் அல்லாஹ்வின் மார்க்க வழியில் குறிப்பாக தடையாக நிற்கிறார். மேலும் மக்களை வழி கெடுக்கிறார். அவருக்கு மரணத்தைக் கொடுக்க வேண்டுமென அல்லாஹ்வின் புறமிருந்து கட்டளையிடப்படுகிறது. ஆனால் சில நேரத்தில் அந்த மனிதர் அக்கட்டளையை செயல்படுவதற்கு முன்னரே பாவ மன்னிப்புத் தேடுகிறார். அல்லது ஓரளவு சீர்திருத்தம் செய்து கொள்கிறார் என்றால் அல்லாஹ்வின் புறமிருந்து முதலில் இடப்பட்ட கட்டளை ரத்து செய்யப்பட வேண்டுமென்ற கட்டளை கிடைத்துவிடுகிறது.

சிறப்பான் தக்தீர் பிறிதொரு சிறப்பான தக்தீரால் மாறி விடுவதற்கான உதாரணம், பாதிரி அப்துல்லாஹ் ஆத்தமின் சம்பவமாகும். அவர் புத்தகம் மற்றும் பேச்சின் வழியாக நபி (ஸல்) அவர்களை அவமானப்படுத்த விரும்பினார். மேலும் அவர்களை ‘தஜ்ஜால்’ (நவூதுபில்லாஹ்) என்று கூறினார். அதிலேயே பிடிவாதமாக இருந்தார். இமாம் மஹ்தி(அலை) அவர்கள் அவரோடு விவாதம் செய்தார்கள் அப்போது, ‘அவர் உண்மையின் பக்கம் திரும்பாவிட்டால் 15 மாதத்திற்குள் அழிவுக்காளாவார்’ என்ற இறைவனின் தக்தீர் (விதி) வெளியானது. இது சிறப்பு விதியாகும். ஆனால் அவர் பயந்து நான் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவ்வாறான வார்த்தையை உபயோகிக்கவில்லை என்று பகிரங்கமாக கூறியது மட்டுமல்லாது, தீய சொற்களை விட்டுவிட்டு அமைதியாக வாய் மூடியிருந்தார். எனவே இந்த தக்தீர் நீங்கிவிட்டது.

ஒருவர் வாளேந்தி இன்னொருவரைத் தாக்க, மற்றொருவர் நீ என்னோடு சண்டையிடுகிறாய். எனவே நானும் உன்னைக் கொல்லப் போகிறேன் என்று கூற, இதனைக் கேட்ட முதலாமவர் தன் வாளை கீழே தாழ்த்தி விட்டால் அது அவர் சண்டையிலிருந்து விலகி விட்டார் என்றே கருதப்படும். அந்த முதலாமவர் சண்டையை விட்டதோடு நில்லாமல் மற்றவரைக் கட்டி அரவணைக்கவும் வேண்டும் என்பது கட்டாயமில்லை.

ஆத்தமைப் பற்றி ‘அவர் உண்மையின் பக்கம் திரும்பவேண்டும்’ என்பது நிபந்தனையாக இருந்தது; அதன் பொருள் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதேயாகும் என நம்மை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். நாம் கூறுகிறோம்; உண்மையின் பக்கம் திரும்புதலில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மகிமை வந்துவிடுகிறது. மனிதன் தவறான வழியை விட்டு விட்டு, நேரான வழியின் பக்கம் வருதல் என்பது மட்டும் அதற்குப் பொருளல்ல. உண்மையின் பக்கம் மீண்டும் மீண்டும் கவனம் செலுத்துவதும் உண்மையின் பக்கம் திரும்புதலேயாகும். அப்படியிருக்கும்போது உண்மையின் பக்கம் திரும்புதல் என்பதற்கு, ‘அப்துல்லாஹ் ஆத்தம் நபிமார்களின் அந்தஸ்தைப் பெற வேண்டும். அதன் பிறகுதான் அவனை மன்னிக்க வேண்டும்’ என்றா பொருள் கொடுப்பது?

உண்மையில் ‘உண்மையின் பக்கம் திரும்புதல்’ என்பதற்கு முஸ்லிமாகிவிடுதல், இமாம் மஹ்தி மஸீஹ் (அலை) அவர்களை ஏற்றுக் கொள்ளுதல், இறைவழியில் உயிர் துறந்த தியாகிகளுள் உள்ளவராக மாறுதல், சித்தீக் (உண்மையாளர்) ஆக மாறுதல் போன்ற படித்தரங்கள் உள்ளன. அத்துடன் நபி (ஸல்) அவர்களை ஏசுகின்ற ஒருவர் அதிலிருந்து விலகி விடுவதும் உண்மையின் பக்கம் திரும்புதலேயாகும். இவ்வகையான திருப்பம் ஆத்தமிற்கு ஏற்பட்டது. எனவே அவர் அதன் பலனைப் பெற்றார்.

அவர் குறித்த வெளியான சிறப்பு விதியை இன்னொரு சிறப்பு விதி நீக்கி விட்டது. மேலும் இறைவனுடைய கருணை எனும் பண்பு தன் மிகைப்புத் தன்மையை நிரூபித்துக் காட்டிவிட்டது.