அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Thursday, January 7, 2016

முன்னறிவிப்பும் விதி நீங்குவதும்

நபித்துவத்தின் உண்மைக்கு முன்னறிவிப்புகளுடன் அதிக தொடர்பு உண்டு. மேலும் முன்னறிவிப்புகள் நீங்குவதனால் நபிமார்களின் எதிரிகளும் கூச்சலிடக் கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. மேலும் முன்னறிவிப்புகள்  என்பது தக்தீர் என்ற விவகாரத்தின் ஒரு கிளையாகும். எனவே தக்தீருக்கும் முன்னறிவிப்புகளுக்கும் என்ன தொடர்பு என்பதையும் நான் எடுத்துக் கூறி விடுகின்றேன்.

முன்னறிவிப்புகள் இரண்டு வகையாக உள்ளன. ஒன்று இறை ஞானத்தை வெளிப்படுத்துவது; இன்னொன்று இறை வல்லமையை வெளிப்படுத்துவது. தக்தீரின் இவ்விரு அம்சங்களையும் புரிந்து கொள்ளாத காரணத்தாலேயே

முஸ்லிம்கள் இவ்விஷயத்தில் பெரும் எமாற்றத்திற் -குள்ளாகியிருக்கிறார்கள்.

இந்துக்களிடத்தில் மறுபிறவிக் கொள்கை உருவானதும் தக்தீரின் இந்த அம்சத்தைப் புரியாததனாலேயேயாகும். இந்துக்கள் இவ்வாறு கேட்கிறார்கள், ஒரு குழந்தை ஏன் குருடாகப் பிறக்கிறது? அது தனது முற்பிறவியில் செய்த செயலுக்கு தண்டனையாகவே அவ்வாறு குருடாகப் பிறக்கிறது என்கின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் இறை நியதி இரு வகைப்படும். 1. இயற்கை விதி, 2. மார்க்க சட்ட விதி.

இந்துக்களின் இந்த கேள்வி அதாவது ஒரு குழந்தை ஏன் நொண்டியாகப் பிறக்கிறது? எந்த குற்றமும் செய்யாத அந்தக் குழந்தையை ஊனமுற்றதாகப் படைத்ததற்கு இறைவன் அநியாயக்காரனா என்ன? எனவே அது தனது முற்பிறவியில் சில தீமைகளைச் செய்திருக்கவேண்டும். அதற்குத் தண்டனையாகத்தான் அது அவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் முடிவெடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இந்த ஏமாற்றம் இரண்டு தவறுகளின் காரணமாக ஏற்பட்டிருக்கின்றன. 1. ஒன்று அவர்களின் விதியின் வகைகளைப் புரிந்து கொள்ளவில்லை. நான் முன்னரே விளக்கியதைபோன்று ‘தக்தீர்’ (இறை நியதி) என்பது இயற்கை விதி, மார்க்க சட்டவிதி என இருவகைப்படும்.

மார்க்க சட்ட விதியானது மார்க்க சட்டங்களைப் பேணுவதால் அல்லது அவற்றை முறிப்பதால் வெளிப்படுகின்றது. மேலும் இயற்கை விதிக்குரிய பின்விளைவு அதன் சட்டங்களைப் பேணுவதால் அல்லது அவற்றை முறிப்பதால் வெளியாகின்றது. குழந்தை குருடாகவோ ஊனமுற்றதாகவோ பிறப்பது மார்க்க வதியின்படியல்ல; மாறாக இயற்கை விதிகளுக்கு மாற்றமாக நடப்பதால் குருடாகவோ, ஊனமுற்றதாகவோ பிறக்கிறது. பெற்றோர்களின் கவனக் குறைவினாலும் பல பக்கவிளைவுகள் ஏற்பட்டு அவை குழந்தையை பாதிக்கின்றன என்று மருத்துவ ரீதியாக நாம் அறிகிறோம். சில பெண்களின் கருப்பை பலவீனமானதாக இருக்கிறது. அதனால் அவர்களின் குழந்தைகள் ஊனமாகப் பிறக்கின்றன. ஆகவே குழந்தைகள் குறைபாடுள்ளதாகப் பிறப்பது கடந்த காலத்தில் செய்த பாவங்களினால் அன்று; மாறாக அதன் பெற்றோர்களின் உடற்கூறில் உள்ள ஏதாவதொரு குறைவினால் ஆகும். குழந்தை தாய் தந்தையரின் உடற்கூறிலிருந்தே வெளியாவதால் அது தனது பெற்றோர்களின் உடலளவிலான நிறைகுறைகளைக் கொண்டு பிறப்பது கண்டிப்பான ஒன்றாகும். ஒருவருடைய செயலின் விளைவு இன்னொருவரின்மீது ஏற்படக் கூடாது என இறைவன் இயற்கை சட்டத்தை மாற்றியமைத்தாலேயொழிய தாய் தந்தையரின் குணத்தால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்கமுடியாது. (ஒருவருடைய செயலின் விளைவு இன்னொருவரின் மீது ஏற்படுகிறது என்ற) இந்த இயற்கை விதியை மாற்றியமைத்தால் இன்றைய உலகமே சின்னாபின்னமாகிவிடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் உலகம் எனும் தொழிற்சாலை இயங்குவதே ‘ஒன்று மற்றொன்றின் நல்ல மற்றும் தீய விளைவுகளை உட்கிரகித்துக் கொள்கிறது’ என்ற இச்சட்டத்தால்தான்.

2. இந்துக்கள் விதியைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவற்றிற்கு இன்னொரு காரணம், ரூஹ் (ஆவிகள்) ஓரிடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன வென்றும் இறைவன் அவற்றைப் பிடித்து பெண்களின் கர்ப்பபைகளில் இடுகின்றான் என்றும் அவர்கள் நம்புவதுதான். ஆனால் இதைவிட மூடநம்பிக்கையான கொள்கை வேறு என்ன இருக்க முடியும். ஏனெனில் இக்கொள்கையை ஏற்றுக் கொண்டாலும் கூட மனிதனின் செயல்களை இறைவனே செய்ய வைக்கிறான் என்று நம்ப வேண்டிவரும். ஏனெனில் உடலில் ரூஹ் (ஆவி) நுழைய வேண்டியது நேரம் வந்திருக்கும்போது படைக்கப்பட விரும்புபவர் எங்காவது பயணத்தில் சென்றிருந்தால் அல்லது அவர் திருமணமே செய்யாமல் இருந்திருந்தால் அந்த ரூஹ் எவ்வாறு உடலில் நுழைய முடியும்? எனவே இக்கொள்கை நம்புவதன் மூலம் மனிதனின் எல்லா செயல்களையும் இறைவனே செய்ய வைக்கின்றான் என்று நம்ப வேண்டியது வரும். உலகில் உள்ள எல்லா செயல்களையும் இறை கட்டளையினால் வற்புறுத்தப்பட்டு அதனைச் செய்ய வேண்டிவருகிறது என நம்ப வேண்டிவரும். மேலும் இதன் மூலம் ஒரு மனிதன், எதன் காரணமாக நற்கூலியோ, தண்டனைக்கோ உரியவனாகின்றானோ அந்த செயலுக்கான சுதந்திரம் நாசமாகிவிடுகின்றது.

இக்கொள்கையை நம்புவதால் இன்னொரு குறைபாடும் உண்டாகிறது. அதாவது கண்டறியப்பட்ட விஷயங்களையும் மறுக்க வேண்டியது கட்டாயமாகிவிடும். உண்மையில் ரூஹ் என்பது விந்தணு கருப்பையில் பெரும் மாறுதலின் விளைவாகும். அம்மாறுதலில் ஏற்படும் குறைபாடுகளின் காரணமாக குழந்தை உயிரில்லாமல் இருப்பதையும் அல்லது உயிர் வந்தாலும் பின்னர் கருப்பையிலேயே வெளியேறி விடுவதையும் நாம் காண்கின்றோம். ஆன்மாக்களை இறைவன் ஒன்று சேர்த்து வைத்துள்ளான் என்ற இந்த கொள்கையை ஏற்றுக் கொள்வதனால் இதனையும் நாம் மறுக்க வேண்டியதாகிவிடும். கண்டறியப்பட்ட உண்மைகளை மறுப்பதென்பது ஓர் அறிவாளியால் முடியாத ஒன்று. (இவ்விஷயத்தைப் பற்றிய விளக்கத்தை அறிய ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் நூலாகிய பராஹீனே அஹ்மதிய்யா 5 ஆம் பாகத்தை கண்டிப்பாகப் படிக்கவேண்டும்)

முன்னறிவிப்புகளைப் புரிந்து கொள்வதில் முஸ்லிம்களும் இவ்வாறே ஏமாற்றமடைந்துள்ளனர். இயற்கை விதி, மார்க்க விதி ஆகியவற்றின் விஷயங்களைப் புரியாத காரணத்தால் இவ்விஷயத்தில் இந்துக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றால், முஸ்லிம்கள் இறைவனின் அறிவு மற்றும் இறை நியதி ஆகியவற்றின் வித்தியாசங்களைப் புரியாத காரணத்தால் இவ்விஷயத்தில் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஏனெனில் நான் கூறியது போன்று விதிகள் இரண்டு வகையாக இருப்பதைப் போன்றே முன்னறிவிப்புகளும் இருவகைப்படும். 1. ஒன்று, இறைவனுடைய நிரந்தர அறிவை வெளிப்படுத்துபவை. 2. இரண்டாவது, இறைவல்லமையை வெளிப்படுத்துபவை இறைவனின் நிரந்தர அறிவை வெளிப்படுத்தக் கூடிய முன்னறிவிப்பு ஒருபோதும் நீங்குவதில்லை (நிறைவேறாமல் இருப்பதில்லை) ஏனெனில் அவை நீங்கிவிட்டால் இறைவனின் அறிவு குறைபாடுள்ளது என்று பொருளாகி விடும் (நவூதுபில்லாஹ்). அனால் இறைவனின் ஆற்றலையும் வல்லமையையும் வெளிப்படுத்தும் முன்னறிவிப்புகள் சிலநேரங்களில் நீங்கியும் விடுகின்றன. இறைவனின் ‘கதீர்’ (ஆற்றல் பெற்றவன்) என்ற பண்பின் கீழ் வெளியாகும் முன்னறிவிப்புகள் மட்டுமே நீங்கிவிடுகின்றன. அலீம் (மிக அறிந்தவன்) என்ற பண்பின் கீழ் உள்ளன ஒருபோதும் நீங்குவதில்லை. (தொடர்ச்சி – முன்னறிவிப்புகள் ஏன் நீங்குகின்றன)