அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Saturday, December 12, 2015

தக்தீர் விவகாரத்தை புரிந்து கொள்ளாததன் விளைவு


இந்துக்களில் மறுபிறவிக் கொள்கை ‘விதி’ பற்றிய விவகாரத்தைப் புரிந்து கொள்ளாத காரணத்தாலேயே உருவானது. மேலும் இதனைப் புரியாததனாலேயே கிறிஸ்தவர்களிடத்தில் பாவ மன்னிப்புக் கொள்கை உருவாக்கப்பட்டது. முதலில் இறைவனின் கருணை எனும் பண்பு மறுக்கப்பட்டது. அதன் விளைவாக பாவ மன்னிப்புக் கொள்கை (அதாவது மனித பாவங்களுக்காக இயேசு பலியானவர் என்ற கொள்கை) உருவானது. மேலும் பாவ மன்னிப்புக் கொள்கையின் விளைவாக தேவ குமாரன் மற்றும் ஷரீஅத்தை சாபமாகக் கூறும் கொள்கைகள் உருவாயின. பின்னர் அதன்

கட்டாய விளைவாக ‘இபாஹத்’ என்ற கொள்கையும் தோன்றியது.

(‘இபாஹத்’ என்பது பாவங்களை விட்டு தவிர்ந்து கொள்வதற்கான ஆற்றலும், கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஆற்றலும் மனிதனிடம் இல்லை என்று நம்புகின்ற ஒரு பிரிவினரின் பெயராகும்.)

இவ்வாறே விதியை புரியாமலேயே ஐரோப்பியாவிலுள்ள தற்போதைய அறிவியல் அறிஞர்களிடத்தில் நாத்திகம் தோன்றியது. மேலும் இதனை அறியாத காரணத்தாலேயே யூதர்களிடத்தில் ‘தமக்கு மட்டுமே இரட்சிப்பு’ என்ற கொள்கை உருவாகியது. முஸ்லிம்களில் நன்மையை செய்யும் ஆற்றல் தீமையை செய்யும் சக்தி நம்மிடம் இல்லை. எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கும் என்ற தவறான கொள்கை உருவானது.

இவர்கள் இந்த விவகாரத்தைப் புரிந்திருந்தால் ஒருபோதும் தடுமாறியிருக்க மாட்டார்கள். எனவேதான் பல்வேறு சமுதாயங்களில் வழிகேட்டைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

(வமா கதருல்லாஹ ஹக்க கத்ரிஹீ)

பொருள்: அவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்கவில்லை (6:92). அதாவது இறை பண்புகளை புரிய வேண்டிய விதத்தில் புரியவில்லை. அதைப் புரியாமல் தடுமாறிப்போனதன் காரணமாக புதிய புதிய கொள்கைகள் உருவெடுத்தன.

சுருக்கமாக, எல்லா மார்க்கங்களும் தமது உண்மையை – அசலை விட்டுப் பிரிந்து விட்டதற்கு காரணமே அவற்றைப் பின்பற்றுபவர்கள் இறை பண்புகளின் வெளிப்பாட்டினை – அதாவது தக்தீரை சரியான முறையில் புரியாததுதான்.

இது மிக நுட்பமான விவகாரமாகும். இதுபற்றி அதிகம் கவனம் செலுத்துவதும், ஆய்வு செய்வது, எச்சரிக்கையாக இருப்பதும் மிக அவசியமாகும். அப்போதுதான் மனிதன் ஒருபுறம் நம்பிக்கையில் நிலைத்திருந்து, மறுபுறம் இறை கோபத்திலிருந்து தப்பித்திருக்க முடியும். மற்றபடி, அதனை ஆய்வு செய்யாமலும் அறிந்து கொள்ளாமலும் இருந்தால் அதனை எப்படி ஏற்றுக் கொள்வதாக ஆகும்? இமய மலையை மலையென்றும், ராவி நதியை நதிஎன்றும், லாகூர் நகரத்தை நகரம் என்றும் நம்பினால் நீங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் என்று எங்காவது இறைவன் கூறியிருக்கிறானா? ஒருபோதும் கூறவில்லை. ஏனென்றால் இவற்றின் மீது நம்பிக்கை கொள்வது ஈடேற்றத்திற்கு வழிகோலாது. ஆன்மீக முன்னேற்றம், ஆன்மீகத்தோடு தொடர்புடையவற்றினாலேயே ஏற்பட முடியும். அவற்றை நம்புதல் என்பது அவற்றின் உண்மையை நிலைமையை நன்றாக புரிவதாகும். அதன் உண்மைத் தன்மையைப் புரியவில்லையென்றால், அதனை நம்புதல் என்று எப்படிக் கூற முடியும்?

தக்தீர் விசயத்தில் முஸ்லிம்களின் மூடத்தனமான குறுக்கீடு

இந்த விவகாரத்தை ஏற்றுக் கொள்வதற்கு இதைப் பற்றி மிகவும் சிந்திப்பது அவசியம். இந்த விவகாரத்தில் தர்க்கம் செய்த சமுதாயங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டன; என் சமுதாயத்திலும் ஒரு பிரிவினர் இதன் காரணமாக அழிவுக்குள்ளாக்கப்படுவார்கள் என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்திருக்கிறார்கள். இது பற்றி வாக்குவாதம் செய்யக் கூடாதென்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருந்தும், இதனை ஈமானின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்டிருந்தும் முஸ்லிம்கள் இதில் மூடத்தனமாகக் குறுக்கிட்டிருப்பது வருந்தத்தக்கதாகும். தனது கொள்கைக்கு திருக்குர்ஆனை அடிப்படையாகக் கொள்ளாமல் தன் மூளையை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஆதாரத்தை திருக்குர்ஆனில் காண முற்பட்டார்கள். ஆனால் திருக்குர்ஆனோ,

(குல்லன் நுமித்து ஹாஉலாயி வ ஹாவுலாயி மின் அதாயி ரப்பிக்) என்றே கூறுகிறது.

பொருள்: (மறுமையை நாடும்) இவர்களுக்கும் (இம்மையை நாடும்) அவர்களுக்கும் எல்லாருக்கும் உம்முடைய இறைவனின் கொடையிலிருந்தும் நாம் உதவி அளிக்கிறோம். (17:21)

பின்னர் திருக்குர்ஆன் எல்லா விவகாரங்களின் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்குகிறது. இப்போது ஒருவர் ஏதாவதொரு விவகாரத்தின் ஓர் அம்சத்தை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை விட்டுவிட்டால் இதனை நான் திருக்குரானிலிருந்து எடுத்துள்ளேன் என்றுதான் அவர் கூறுவார். ஆனால் உண்மையில் அவர் அதனைத் குர்ஆனி லிருந்து எடுக்கவில்லை. மாறாக, தன் சொந்த கருத்திற்கு திருக்குர்ஆனின் துணையை அவர் நாடியிருந்தார். அவர் திருக்குர்ஆனிலிருந்து கருத்தை எடுக்கிறார் என்றால் அதன் எல்லா அம்சங்களையும் கருத்தில் கொள்வார். ஓர் அம்சத்தை எடுத்துவிட்டு, மற்றவற்றை விட்டுவிட மாட்டார்.

ஒருமுறை நான் ஓரிடத்திற்குச் சென்றேன். அப்போது நான் மதரஸாவில் படித்துக் கொண்டிருக்கும் சிறுவனாக இருந்தேன் மாணவர்விடுதியில் ஒரு பையன் எள்ளு மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த முறை நகைப்பிற்குரியதாக இருந்தது. அதாவது வேறு யாரும் பார்த்துவிடக் கூடாதே என்று பயப்படுபவனைப் போல அந்த பைய்யன் எள்ளு மிட்டாயை மறைத்து வைத்திருந்தான். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. என்ன செய்கிறாய்? என்று நான் கேட்டேன். அப்போது அவன், ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு எள்ளு மிட்டாய் மிகவும் பிடித்தமானது என நான் கேள்விப்பட்டிருகிறேன். அந்த சுன்னத்தை (நடைமுறையை) முழுமை செய்கிறேன் என்று கூறினான். அதற்க்கு நான், ‘அவர்கள் QUININE (கொய்னா எனும் கசப்பு மருந்து) கூடத்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். அதனையும் சாப்பிடேன்’ என்று கூறினேன்.

ஒன்றை எடுத்துக் கொண்டு மற்றதை  விட்டு விடுதல்.

மனிதன் தன்னைத்தானே காப்பாற்ற நினைக்கும்போது தனக்கு பயனளிக்கக் கூடியதை எடுத்துக் கொண்டு, பிறவற்றை விட்டு விடுகிறான். ஆனால் உண்மையை தேடுபவர்கள் எல்லா அம்சங்களையும் கவனத்தில் கொள்கிறார்கள். இதனால் நமது எண்ணம் அல்லது கவனத்திற்கு மாற்றமான ஒரு விளைவு ஏற்படுமே என்பதைப் பற்றி அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

நமது ஜமாத்தில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையையே எடுத்துக் கொள்ளுங்கள். ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள், நான் ஷரீஅத்துடைய நபி இல்லை. ஆயினும் நபி (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றியதன் காரணமாக நுபுவத்தின் அந்தஸ்தைப் பெற்றேன். எனவே நான் உம்மத்தி நபியாவேன் என்று கூறினார்கள். இப்போது ஒரு நபிக்கு ஷரீஅத் கொண்டு வரவேண்டியது கட்டாயமேன்றால், ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ்(அலை) அவர்கள் கூட நான் ஷரீஅத்தின் கட்டளைகளை கொண்டுவந்துள்ளேன் என்று கூறுகிறார்கள். எனவே அவர்கள் ஷரீஅத்துடைய நபியாவார்கள் என்று ஒன்றிரண்டு பேர் எழுந்து கூறுகிறார்கள். இவர்கள் மற்றொரு அம்சத்தை விட்டுவிட்டார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நான் நபி இல்லை என்று ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ்(அலை) அவர்கள் எழுதியுள்ளார்கள். எனவே அவர்கள் எவ்வித நபியுமில்லை என்று கூறுகிறார்கள். இவர்களும் இரண்டாவது அம்சத்தை விட்டுவிட்டார்கள். ஆனால் நாம் இரண்டு அம்சங்களையும் எடுக்கிறோம். அதாவது ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் ஷரீஅத்துடைய நபியல்ல: ஆனால் உம்மத்தி நபியாவார்கள்.

கருத்து வேற்பாடு கொள்பவர்கள் இருவித அம்சங்களையும் எடுத்தால் தவறிழைக்க மாட்டார்கள். நாம் இரண்டு அம்சங்களையும் எடுத்துள்ளோம். அவர்கள் நபியுமாவார்கள்; அதே சமயத்தில் உம்மத்தியும் ஆவார்கள்.

எவர்களிடம் தக்வா மற்றும் நேர்மை இருப்பதில்லையோ மேலும் தெளிவான முறையில் மறுப்பதற்கு தைரியமில்லையோ அவர்கள்தான் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு பிறவற்றை விட்டுவிடக் கூடிய இந்த முறையை கையாள்கிறார்கள் என்பது பொதுவான விதியாகும். ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, நாங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறோமே என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்ற சிலர், தொழுகையின் பக்கம் நெருங்காதீர்கள் (4:44) என்ற திருக்குர்ஆனின் கட்டளையின் படி நடக்கிறோம் என்று கூறிவிடுகிறார்கள். (மயக்க நிலையில் இருக்கும்போது என்ற) வசனத்தின் மறு பகுதியை ஏன் விட்டு விடுகிறீர்கள் என்று கேட்டால், முழு குர்ஆன்படி யார் செயல்படமுடியும்? என்று கூறுகின்றனர்.