அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Saturday, December 12, 2015

எல்லா செயலையும் இறைவனே செய்ய வைக்கிறான் என்ற சிந்தனைக்கு மறுப்பு


எவர்கள், மனிதன் செய்வதையெல்லாம் இறைவனே செய்ய வைக்கிறான்; மனிதனுக்கு அதில் எந்த அதிகாரமும் இல்லை என்று கூறுகிறார்களோ அவர்கள் தமக்கு சாதகமாக திருக்குர்ஆனிலுள்ள சூரா சப்பாத் அதிகாரத்தில் பின்வரும் வசனங்களை எடுத்து வைக்கிறார்கள்;

(வல்லாஹு கலககும் வமா தஹ்மலூன்)

அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைத்துள்ளான்.

(37:97)

நம்மையும், நமது செயல்களையும் இறைவனே படைத்திருக்கும்போது, செய்வதெல்லாம் இறைவனே செய்கிறான். இதற்குப் பிறகும் நான் ஒன்றைச் செய்கிறேன் என்று யார் கூற முடியும்? அவர்களின் கருத்தின்படி இந்த வசனம் இந்த விவகாரத்தை தெளிவான முறையில் தீர்த்துவிட்டது என்று அவர்கள் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள், நான் இப்போது கூறிய அதே தவற்றைத்தான் செய்துள்ளார்கள். அதாவது, அவர்கள் வசனத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். மற்றதை அத்துடன் இணைத்துப் பார்க்கவில்லை.

ஏனெனில் இந்த வசனத்திற்கு முந்தைய வசனம் இதுவாகும்:

(கால அதஹ்புதூன மா தன்ஹிதூன்)

பொருள்: நீங்களே செதுக்கிக் கொண்டவற்றை நீங்களே வணங்குகின்றீர்களா? (திருக்குர்ஆன் 37:96)

அரபி இலக்கண விதிப்படி, ‘மா’ என்ற சொல் சில நேரத்தில் வினைச் சொல்லுடன் சேர்ந்து வரும்போது பெயர் உரிச்சொல்லின் பொருளைத் தருகிறது. சில நேரங்களில் செயப்படு பொருளின் பொருளைத் தருகிறது.

எவர்கள் (வல்லாஹு கலககும் வமா தஹ்மலூன்) என்ற வசனத்திற்கு அல்லாஹ் உங்களையும் படைத்துள்ளான்; உங்களது செயல்களையும் படைத்துள்ளான் என பொருள் கொள்கிறார்களோ அவர்கள் இந்த இடத்தில் பெயர் உரிச் சொல்லின் பொருளைக் கொடுக்கிறார்கள். ஆனால் இங்கு பெயர் உரிச் சொல்லின் பொருளைத் தராது என்பது முந்தைய வசனத்திலிருந்து தெளிவாகிறது. ஏனெனில் முந்தைய வசனமாகிய ‘அதஹ்புதூன மா தன் ஹிதூன்’ என்பதை சேர்த்துப் படித்தால் – அதற்க்கு அல்லாஹ் உங்களையும் உங்களது செயல்களையும் படைத்துள்ளான் என பொருள் கொடுத்தால் இந்த வசனம் அர்த்தமில்லாது போய்விடும். மேலும் அடுத்துள்ள வசனம் முன்னுள்ள வசனத்தை மறுக்கிறது. ஏனெனில் முன்னுள்ள வசனத்தில், நீங்களே செதுக்கிக் கொண்டவற்றை நீங்கள் ஏன் வணங்குகின்றீர்கள் என வினவப்பட்டுள்ளது. பின்னுள்ள வசனத்தில், உங்களையும், உங்களின் செயல்களையும் இறைவன் படைத்துள்ளான் என கூறப்பட்டுள்ளது. இந்த சொற்றொடர் சம்பந்தமில்லாதது மட்டுமல்லாமல் நேர்மாறானதாகும். ஏனென்றால், இறைவனே அவர்களின் செயல்களைப் படைத்திருக்கும் போது, நீங்கள் சிலைகளை ஏன் வணங்குகிறீர்கள் என வர்களிடம் ஏன் வினவப்படவேண்டும்?

எனவே இந்த வசனத்திற்கு இந்த பொருள் இருக்கவே முடியாது, மாறாக, இந்த இரண்டு வசனங்களின் பொருள், நீங்கள் உங்கள் கைகளினாலேயே செதுக்கி உருவாக்குகின்றவற்றை நீங்கள் வணங்குகின்றீர்களா என்ன? ஆனால் அல்லாஹ்வோ உங்களையும் படைத்துள்ளான்; நீங்கள் செதுக்குகின்றவற்றையும் – அதாவது சிலைகளையும் – படைத்துள்ளான் என்பதாகும். மேலும் ‘மா’ எனும் உருபு முதல் வசனத்தில் தனக்குப் பின்னுள்ள வினைச் சொல்லுடன் சேர்ந்து செயப்படுபொருளின் அர்த்தத்தைக் கொடுப்பது போன்றே அடுத்துள்ள வசனத்திலும் செயப்படுபொருளின் அர்த்தத்தைக் கொடுக்கிறது. அதாவது மா தஹ்மலூன்’ என்பது ‘மஹ்மூலுக்கும்’ என்பதாகும். அதாவது நீங்கள் செதுக்குபவற்றையும்.

(அல்லாஹ்தான் உங்களையும் படைத்துள்ளான்; நீங்கள் செதுக்குகின்ற சிலைகளையும் படைத்துள்ளான் எனபது இந்த (37:96-97) வசனங்களின் கருத்தாகும்.)

சுருக்கமாக, இந்த வசனதிற்கு தவறான பொருள் கொடுக்கப்படுகிறது. இந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனமே இதற்க்கான அர்த்தங்களைத் தீர்த்து வைக்கிறது. இந்த வசனத்தில் மனித செயல்கள் (இறைவனால்) உருவாக்கப்படுவது பற்றிய எந்த குறிப்பும் இல்லை.

இரண்டாவது வசனத்தின் சரியான பொருள்

இந்த வசனத்தைத் தவிர வேறு சில வசனங்களையும் இம்மக்கள் எடுத்து வைக்கிறார்கள். அவற்றில் ஒன்றிரண்டு பெரிய வசனங்களைப் பற்றி இப்போது கூறுகிறேன். (விதிக்கு சான்றாக) மக்கள் இந்த வசனத்தை எடுத்து வைக்கிறார்கள்.

“நீர் (அவர்களிடம்) கூறுவீராக: அல்லாஹ் எங்களுக்கு விதித்திருப்பதுதான் எங்களுக்கு ஏற்படும். அல்லாஹ்வே எங்கள் பாதுகாவலனாவான். மேலும் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்விடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்.” (9:51)

ஏற்கனவே மனிதனுடைய தலையெழுத்தில் எழுதப்பட்டதுதான் அவனுக்குக் கிடைக்கிறது என இறைவனே (இவ்வசனத்தில்) கூறுவதாக அவர்கள் கூறுகின்றார்கள். உணவு, உடை, செல்வம் போன்றவை இன்னாருக்கு இவ்வளவு, இவ்வளவு கிடைக்க வேண்டும் என இறைவன் எழுதியதை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ மனிதனுக்கு கிடைப்பதில்லை.

அல்லது இன்னின்ன ஆட்களை இன்னின்ன வழிகளில் கொலை செய்ய வேண்டும் என்றோ, இன்னின்ன இடங்களில் இந்த ஆள் மூலம் தூக்கில் தொங்க வேண்டம் என்றோ எழுதப்பட்டிருக்கும்போது மனிதனுக்கு என்ன அதிகாரம் உள்ளது? என அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையில் இங்கு கூறப்பட்ட விஷயமே வேறாகும். இந்த இடத்தில் நிராகரிப்பவர்களுடனுள்ள போர் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான். போரின் விளைவாக முஸ்லிம்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் நயவஞ்சகர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். மேலும் நாம் ஏற்கனவே நமது பாதுகாப்பிற்கான ஏற்பாட்டை செய்து விட்டிருந்தோம்; எனவே நாம் துன்பத்திலிருந்து தப்ப்பிவிட்டோம் என்றும், தன்னை விட வலிமை மிக்கவர்களுடன் போரிடுகின்ற முஸ்லிம்கள் மடையர்களாவர் என்றும் அந்நயவஞ்சகர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் கூறுவதாவது, நீங்கள்தான் மடையர்கள்; குருடர்கள். முஸ்லிமகள் தோல்வியடைவார்கள். மேலும் நிராகரிப்பவர்கள் வெற்றி பெற்றுவிடுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அது நடக்காது. ஏன்? ஏனெனில் தனது தூதர் எப்பொழுதும் வெற்றி பெறுவார் என இறைவன் நியமிக்கப்பட்ட நடைமுறையின்படி, முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்று அவன் விதித்துள்ளான்.

எனவே ஒவ்வொரு செயலும் இறைவனின் கட்டளைக்கேற்ப நடக்கிறது என்பது இங்கு குறிப்பிடப்படவில்லை. மாறாக, நம்பிக்கையாளர்கள், நிராகரிப்போரை முறியடிப்பார்; மேலும் வெற்றி பெறுவார் என்ற விஷயம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே குறிப்பிடுகிறது. அவ்வாறல்லாமல் வழிப்பறி செய்தல், திருடுதல், கொள்ளையடித்தல், பொய்யுரைத்தல் ஆகியவை குறித்து இறைவன் எழுதிவைத்திருக்கிறான் என்பதல்ல. (அல்லாஹ் எங்களுக்கு விதித்திருப்பதுதான் எங்களுக்கு ஏற்படும் என்ற (9:51) வசனத்தில் உள்ள) இ(க்கருத்)தினை இறைவனே திருக்குர்ஆனில் பிறிதோரிடத்தில், நானும் எனது தூதர்களும் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீருவோம் என அல்லாஹ் எழுதியுள்ளான்’ என்று கூறியுள்ளான். (58:22)

ஆகவே, இந்த வசனத்தில் ‘எழுதியுள்ளான்’ என்பது மனித செயல்களை குறித்தல்ல. மாறாக, இறைதூதர் மற்றும் நம்பிக்கையாளர்களின் வெற்றியை குறித்ததாகும்.

மூன்றாவது வசனத்தின் சரியான பொருள்

பின்னர் (விதிக்கு சான்றாக) அவர்கள் இன்னொரு வசனத்தையும் முன் வைக்கிறனர்.

“நிச்சயமாக நாம் ஜின்களிலும் மனிதர்களிலும் பெரும்பாலானவர்களை நரகத்திற்காகப் படித்திருக்கிறோம். அவர்களைப் புரிந்து கொள்ளும் அடையாளங்கள் என்னவெனில், அவர்களுக்கு உள்ளங்கள் இருந்தும் அவற்றால் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆயினும் அவர்கள் காண்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு; ஆயினும் அவர்கள் கேபதில்லை. அவர்கள் கால் நடைகளைப் போன்றவர்களாவர். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் அவற்றை விடவும் மிகக் கெட்டவர்களாவர். உண்மையில் அவர்கள் கவனமற்றவர்களே ஆவர்.”(7:180)

இந்த வசனத்தை எடுத்துக் கொண்டு அவர்கள், பாருங்கள்! நரகத்திற்காக ஜின்களையும், மனிதர்களையும் நான் படைத்துள்ளேன் என இறைவனே கூறுகின்றான். இறைவனே பலரை நரகதிற்காகப் படைத்திருக்கும்போது அவர்களை தீய செயல்கள் செய்வதை விட்டும் யாரால் தடுத்து நிறுத்த முடியும்? நரகத்தின் பக்கம் அவர்களை இழுத்துச் செல்லும் செயல்களைச் செய்வது அவர்களுக்கு கட்டாயமாகி விட்டது எனக் கூறுகின்றனர்.

ஆனால் இந்த வசனத்திற்கு கொடுக்கப்படும் பொருளும் தவறானதாகும். அரபி மொழியில் ‘லாம்’ என்ற எழுத்து சில நேரத்தில் காரணத்தைத் தெரிவிப்பதற்கும், இன்னும் சில நேரத்தில் விளைவைத் தெரிவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மொழி வழக்கில் அதனை ‘லாமுல் ஆகிபா’ என்பர். இங்கு ‘லி ஜஹன்னம’ என்பதில் உள்ள ‘லாம்’ இந்த நோக்கத்திற்காகவே வந்துள்ளது. நரகத்தில் நுழைப்பதற்காகவே நாம் ஜின்னையும் மனிதனையும் படைத்துள்ளோம் என்பது அதற்குப் பொருளல்ல. ஏனெனில் இந்தப் பொருள், மற்ற வசனங்களுக்கு நேர் மாற்றமானதாகும். உதாரணமாக, நான் ஜின்களையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன் என அல்லாஹ் கூறுகிறான். (51:57)

இறையடியாரைக் குறித்து, வத்குலி ஜன்னதி இறை அடியாரின் தங்குமிடம் சுவர்க்கமாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். (89:30-31)

ஆகவே இந்த வசனங்கள் இருக்கும்போது, ‘வலகத் ஸறஃனா லி ஜஹன்னம’ என்பதற்கு, அல்லாஹ் பலரை நரகத்திற்காகப் படைத்துள்ளான் என்று பொருள் கொள்ளவே முடியாது.

மனிதன் இறைவனின் அடியானாக ஆகுவதற்கும், சுவர்கத்திற்கு உரியவனாக ஆகுவதற்குமே படைக்கப்பட்டுள்ளான். (அல்லாஹ் நரகத்திர்காகப் படைத்துள்ளான் என்ற) இந்தப் பொருள் சரியில்லைஎன்றால் வேறொரு பொருள் கொடுக்க வேண்டியது வரும். இங்கு வந்துள்ள ‘லாம்’ என்பதும் லாமுல் ஆகிபா (விளைவைக் குறிப்பிடும் லாம்) என்ற பொருளில்தான் வந்துள்ளது. எனவே இந்த வசனத்தின் பொருள் நாம் மனிதனைப் படைத்துள்ளோம். ஆனால் அவன் சுவர்க்கவாசியாக ஆகுவதற்குப் பதிலாக நரகத்திற்குரியவனாக ஆகிவிட்டான் என்பதாகும். இந்த பொருளில் ‘லாம்’ அரபி மொழியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் திருக்குர்ஆனிலும் மற்ற இடங்களிலும் இந்த பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரபி மொழி நடையில் அதற்கு பின்வரும் கவிதை ஓர் உதாரணமாகும்:

(அமவாலுனா லிஸவில் மிராஸி நஜமுவுஹா வதுவரனா லி கராபித்தஹ்ரு நப்நீஹா)

பொருள்: வாரிசுகள் எடுத்துச் செல்வதற்காக நாம் செல்வங்களைச் சேகரிக்கிறோம். காலம் நாசமாக்க வேண்டும் என்பதற்காக நாம் வீடுகளைக் கட்டுகிறோம்.

செல்வங்களை சேகரிப்பதற்கும் வீடுகளைக் கட்டுவதற்கும் உள்ள நோக்கம் இதுவல்ல என்பது வெளிப்படை, ஆயினும் ஏற்படும் விளைவு இதுதான்.

கவிஞரின் நோக்கம், மக்கள் செல்வங்களை சேகரிக்கிறார்கள். ஆனால் உறவினர்கள் அவற்றை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறே மக்கள் வீடுகளைக் கட்டுகின்றனர். ஆனால் விளைவோ, காலங்கள் அந்த வீடுகளை நாசமாக்கி விடுகின்றன என்பதாகும்.

திருக்குர்ஆனில் மிகவும் தெளிவான உதாரணம் கஸஸ் எனும் அதிகாரத்தில் வந்துள்ளது. அங்கு இறைவன் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் குறித்து இவ்வாறு கூறுகின்றான்:

பல்தகதஹு ஆலு பிர்அவ்ன லியகூன லஹும் அதுவ்வன்வ்வ ஹஸனா – 28:9)

அதாவது ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களை அவரது தாயார் நதியில் போட்ட போது, அவரை பிர்அவ்னின் மக்கள், அவர் பெரியவராகி அவர்களுக்கு விரோதியாக ஆகுவதற்காகவும் எடுத்துக் கொண்டனர்.

ஆனால் பிர்அவ்னின் குடும்பத்தவர்கள் மூஸாவை எடுத்துக் கொண்டபோது அவர்களின் நோக்கம் இதுவாக இருந்திருக்க முடியாது என்பது தெளிவான விஷயம். அடுத்த வசனத்திலிருந்தே தெரிவாதைப் போன்று, அவர்களின் நோக்கம் இதுவாக இல்லாதிருந்தது மட்டுமல்லாது அதற்கு மாற்றமாக. இருந்தது. ஏனெனில் அடுத்த வசனத்திலேயே, பிர்அவ்னின் மனைவி பிர்அவ்னிடம் இவ்வாறு கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான்:

“இவன் நமக்குப் பயனளிக்கலாம்: அல்லது நாம் இவனை மகனாக ஆக்கிக் கொள்ளலாம் என்றாள். ஆனால் அவர் பெரியவராகி, அவர்களின் அழிவிற்குக் காரணமாவார் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.” (28:10)

எனவே இந்த வசனத்தின் பொருள், பிர்அவ்னின் குடும்பத்தினர் அவரை எடுத்துக் கொண்டனர். ஆனால் கடைசியில் அந்த குழந்தை அவர்களுக்கு எதிரியானது. மேலும் அவர்களின் துயரத்திற்கு காரணமாக அமைந்தது என்பதாகும். மேலும் இதே பொருள்தான் நரகத்திற்காக நாம் படித்திருக்கிறோம் என்பதில் ‘லாம்’ என்ற சொல்லுக்கு உண்டு.

(அதாவது, மனிதன் இறை நெருக்கத்தைப் பெற்று சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பதற்காக நாம் அவனைப் படைத்தோம். ஆனால் அவன் தீய செயலின் காரணமாக நரகத்திற்குக் காரணமாகி விட்டான்.)

ஆகவே இந்த வசனத்திலிருந்து இறைவன் சிலரை நரகவாசியாகவும், இன்னும் சிலரை சொர்க்கவாசிகளாகவும் வலுக்கட்டாயமாக ஆக்குகிறான் என்று ஆதாரம் எடுப்பது சரியல்ல. 
(தொடர்ச்சி)