அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Monday, January 11, 2016

தக்தீரே முப்ரம்

தக்தீரே முப்ரம் (நீங்காத விதி) என்பது குறிப்பிட்ட நிலைமைகளினாலேயே தவிர நீங்குவதில்லை என நான் முன்னரே குறிப்பிட்டேன். தக்தீரே முப்ரம் நீங்குதல் என்றால் என்ன பொருள் என்பதைப் பற்றி இப்போது கூறுகிறேன். தக்தீரே முப்ரம் நீங்குதல் என்றால் அது உண்மையிலேயே முற்றிலுமாக நீங்கிவிடுகிறது என்று பொருளல்ல. மாறாக அதன் நிலை மாறிவிடுகிறது: அது வேறொரு வகையில் மாற்றப்படுகிறது என்பதே அதற்குப் பொருள். இந்த தக்தீர் நுட்பத்திலும் நுட்பமான இரகசியங்களின் அடிப்படையில் இறங்குகிறது. அது மாறி விடுவதால் சிலநேரத்தில் இன்னும் பல சட்டங்களின்மீது அது தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஆகவே இந்த தக்தீர் அல்லாஹ்வின் சிறப்பு ஹிக்மத்தின் அடிப்படையில் முழுவதுமாக நீக்கப்படுவதில்லை. நீங்குகிறதென்றால் பரிந்துரையினால் நீங்குகிறது; அதுவும் சில குறிப்பிட்ட நிலைமைகளில் மட்டும்தான். உலகம் தோன்றிய நாள் முதல் மிகச் சில தடவைகள்தான் இறைவன் இந்நிலைமைகளில் தன் அடியார்களை நிலைபெறச் செய்துள்ளான்.

இந்த தக்தீர் நீங்கிவிடுவதற்கு ஹஸ்ரத் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூறலாம். ஹஸ்ரத் அப்துல் காதிர் ஜீலானி (ரக) அவர்களுக்கு ஒரு முரீது இருந்தார். அவரோடு அவர்கள் மிகவும் நேசம் கொண்டிருந்தார். அவர் கண்டிப்பாக மானக்கேடான விஷயத்தை செய்வார் என அவரைப் பற்றி அவர்களுக்கு (இறைவனிடமிருந்து) செய்தி கிடைத்தது. இது ‘தக்தீரே முப்ரம்’ ஆகும். எனவே ஹஸ்ரத் அவர்கள் இதை பற்றி தொடர்ந்து துஆச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு நாம் நமது வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டோம்; உங்கள் துஆவையும் கேட்டுக் கொண்டோம். என பதில் கிடைத்தது. என்ன நடந்தது என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவருடைய முரீது சந்திக்க வந்தபோது உம்மைப்பற்றி இந்த மாதிரி எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் உம்மிடம் கூறவில்லை. துஆச் செய்து கொண்டிருந்தேன். போன்ற விவரங்களைக் கூறி இப்போது இவ்வாறு செய்தி கிடைத்துள்ளது என்ன விஷயம்? எனக் கேட்டார்கள். அப்போது முரீது கூறினார்: நான் ஒரு பெண்ணை விரும்பினேன். அவளை திருமணம் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் தோல்வியுற்றேன். இறுதியின் என்ன வந்தாலும் அவளுடன் உடலுறவு கொள்வேன் என தீர்மானித்தேன். இம்முயற்சியில் இருக்கும் போது ஒருநாள் இரவு ருஹ்யாவில் (ஆன்மீகக் காட்சியில்) அவளைக் கண்டேன். அவளோடு நான் உறவு கொண்டேன். விழித்ததும் ஆவலுடன் எனக்கிருந்த அன்பு முழுவதும் வெளியேறிவிட்டது. என் நிலைமை மாறியது.

அந்த மனிதனின் செயல்களின் விளைவாக வெளியாகவிருந்த தக்தீர் நீங்க முடியாத நிலையில் இருந்தது. இறைவன் அதனை வேறொரு விதத்தில் முழுமை செய்து அம்மனிதனை பாவத்திலிருந்து காப்பாற்றி விட்டான் என்பதை ஹஸ்ரத் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். மேலும் ஹஸ்ரத் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் துஆவி இறைவன் அம்மனிதனின் விஷயத்தில் ஏற்றுக் கொண்டு தனது சிறப்பான ஆற்றலின் மூலம் அம்மனிதனை அவனது தீய செயல்களின் தீய விளைவுகளிலிருந்து காப்பாற்றிவிட்டான்.

தக்தீர் நீங்குவதால் குறைபாடு ஏற்படுமா?

தக்தீர் அகன்றுவிடுவதால் இறைவனின் மகத்துவத்தில் ஏதும் பாதிப்பு ஏற்படாதா என்றொரு கேள்வி பிறக்கிறது. பாதிப்பு ஏற்படாது என்பதே அதற்குரிய பதிலாகும். ஏனெனில் தக்தீர் அகன்று விடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. முதலில் தக்தீரை எடுத்துரைத்து பின்னர் அதனை நீக்கிவிடுவதால் அல்லாஹ்வின் கருணை பண்பு வெளியாகின்றது. ஏனெனில் வரக் கூடிய துன்பத்தைப் பற்றி அடியாருக்கு முன்னறிவிப்பதால் அந்த அடியார் எச்சரிக்கையாகி விடுகிறார். மேலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் அருளால் அவர் அந்த துன்பத்திலிருந்து தப்பித்து விடுகிறார். ஆகவே தக்தீரைப் பற்றி அது நடப்பதற்கு முன்னரே அறிவிப்பதும் அல்லாஹ்வின் இறக்க குணத்தைக் காட்டுகிறது; பிறகு அதனை நீக்கி விடுவதும் அவனது கருணைப் பண்பினை சுட்டிக் காட்டுகிறது. இதில் எந்த குறையும் இல்லை; இதில் பழங்கள்தான் உள்ளன.

பொதுவான தக்தீரின் விளைவினால் அல்லாமல் ஆன்மீக நிலைமைகளை மாற்றிக் கொள்வதால் இறங்குகின்ற சிறப்பு விதியை நீக்குவதில் இன்னொரு பலனும் உண்டு. அது அல்லாஹ்வின் வல்லமை வெளிப்படுவதாகும். நன்கு சிந்தித்துப் பார்த்தால் சிறப்பு விதியை அகற்றாமல் அல்லாஹ்வின் முழுமையான ஆற்றல் வெளிப்படுவதில்லை.

உதாரணமாக ஒருவர் நபிமார்களின் எதிர்க்கிறார். உண்மை மார்க்கம் பரவுவதில் தடையாக இருக்கிறார். அவருக்குத் தண்டனை கொடுப்பது அவசியமாகிறது. அவர் அழிவுக்காளாவார் என இறைவன் புறமிருந்து இறைதூதருக்கு செய்தி கிடைக்கிறது. பிறகு அந்த மனிதர் பாவமன்னிப்புத் தேடியும் அழிவுக்காளாகிவிட்டால் அதனால் இறைவன் காதிர் (ஆற்றல் உடையவன்) என்பது மறைவான ஒன்றாகிவிடும். இறைவன் அலீம் (மிக அறிந்தவன்) என்பது மட்டுமே அதிகபட்சமாக நிரூபணமாகலாம். ஆனால் அவன் ஆற்றல் மிக்கவனாக ஆகாதவரை வெறும் அறிந்தவனாக இருப்பதில் யாதொரு சிறப்பும் இல்லை. அவன் ஆற்றல் உள்ளவனாக இருப்பதே மனிதனிடமுள்ள அன்பை தன்னளவில் ஈர்க்க முடியும்.

ஆகவே, ஒரு செய்தியைத் தெரிவித்த பின்னர் அதனை மாற்றாது இருப்பது வெறும் மறைவானவற்றைப் பற்றி ஞானத்தை மட்டும் எடுத்துக்காட்டுமே தவிர அவனது வல்லமையை ஆற்றலை எடுத்துக் காட்டாது. மறைவான செய்தியை எடுத்துரைக்கும் நபிக்கு அந்த மறைவான விஷயங்களை தெரிந்துக் கொள்ளக் கூடிய யுத்தி தெரிந்திருக்கிறது என்ற மக்களுக்கு சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒரு கட்டளை குறிப்பிட்ட நிலைமைகள் மாறுவதால் நீன்கிவிடுமென்றால் காலத்திற் கேற்றவாறு கட்டளையிடும் ஒரு ஆற்றல் மிக்கவனிடமிருந்து அந்த கட்டளை பிறந்தது என்பதும், மனிதன் தன் நிலைமையை மாற்றிக் கொள்வதைப் பொறுத்து இறைவனும் தனது தக்தீரை மனிதனுக்காக மாற்றிக் கொள்கிறான் என்பதும் தெளிவாக நிரூபணமாகிவிடுகிறது.

மேலும் அதனால் இறைவனது மகிமை மற்றும் மகத்துவம் ஆகியவை வெளிப்படுகின்றன. பிறகு அடியானின் நம்பிக்கையும் வலுப்பெறுகிறது. இறைவன் பிடிக்கின்றான் என்றால் மன்னித்தும் விடுகிறான். ஓர் இயந்திரத்தைப் போல் அல்ல என மனிதன் நம்புகிறான். நியாய உணர்வுடன் பார்க்கப் போனால், எச்சரிக்கை வகையிலான முன்னறிவிப்புகள் நீங்காவிட்டால் இறைவன் ஆற்றல் உடைவன் என்பது நிரூபணமாகாமல் போய்விடும் என்பதை எல்லாராலும் புரிந்து கொள்ளலாம். மேலும் இறைவன் ஓர் இயந்திரத்தைப் போன்றவன். அதில் கரும்பை இட்டாலும் அதனைப் பிழிந்து விடுகிறது. அதில் முதலாளியின் கை பட்டாலும் அதனையும், அது பிழிந்து விடுகிறது என்றாகிவிடும். ஒருவர் எவ்வளவுதான் பாவமன்னிப்புக் கோரினாலும் அவனது கட்டளை மாறாது; நீங்காது அதில் எந்த வித்தியாசமும் ஏற்படுவதில்லை அவனது பகைமையை விட்டுவிட்டு அவனோடு நட்பு கொள்வதில் எந்த பயனும் இல்லை என்றாகிவிடும்.

இவ்விதமான முன்னறிவிப்புகள் மாறிவிட்டால் அவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்க முடியும்? இவையனைத்தும் வெறும் அநுமானங்கள்தான் என்று ஏன் கூறக்கூடாது? என்ற சந்தேகம் எவருக்காவது இங்கு எழக்கூடும். இதற்குரிய விடையாவது. முதலில் முன்னறிவிப்புகள் மறைமுகமான காரணிகளை சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன. அதாவது அது நிகழ்வதற்கான காரணிகள் வெளிப்படையான முறையில் தென்படுவதில்லை. எவற்றிகான காரணிகள் வெளிப்படையில் காணப்படுமோ அவற்றையே யூகம், அநுமானம் என்று கூறுகிறோம்.

உதாரணமாக ஒருவர் நோயாளியாக இருக்கிறார். அவரைப்பற்றி, அவர் இறந்துவிடுவார் எனக் கூறினால் அதில் அநுமானத்திற்கு இடமுண்டு. ஆனால் காரணிகளே இல்லாதவற்றைப் பற்றி முன்னறிவித்து, அவை வெளிப்படத் துவங்கினால் பின்னர் அவை அகன்றுவிட்டாலும் கூட அதனை அநுமானத்தின் அடிப்படையில் கிடைத்த செய்தியாகக் கூற முடியாது. ஏனென்றால் அச்செய்தியின் ஒருபகுதி இன்னொரு பகுதியின் உண்மை தன்மைக்கு சாட்சி முத்திரையாக இருக்கிறது. எனவே முன்னறிவிப்புகள் நீங்கினாலும் அவற்றின் உண்மை தன்மையில் சந்தேகம் தோன்ற முடியாது. அப்படி நீங்கினாலும். உலகத்தின் நேர்வழிக்கு அவை போதுமானவையாக இருக்கின்றன.

இந்த சந்தேகத்திற்குரிய இரண்டாவது பதில் என்னவென்றால் எச்சரிக்கை வகையிலான முன்னறிவிப்புகள் எதிரிகளுக்காக ஏற்படுகின்றன. எதிரிகளோ பொதுவாக பிடிவாதம் கொண்டவர்களாகவும் தமது சர்ச்சையில் கிண்டலடிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றன. எனவே முன்னரே எச்சரிக்கை செய்தாலும் மிகக் குறைவாகவே பலன் பெறுகிறார். எச்சரிக்கை வகை முன்னறிவிப்பினால் பலன் பெற்று அவற்றின் மூலமாக ஆக்கினை அவர்களை விட்டு அகன்றது மிகச் சிலருக்குத் தான். வாக்குறுதி வகையிலான அனைத்து முன்னறிவிப்புகளும் எச்சரிக்கை வகையிலான முன்னறிவிப்புகளில் கூட 90% அல்லது 95% முன்னறிவிப்புகளும் முழுமையான நிறைவேறி முன்னறிவிப்பு செய்பவரின் உண்மையை பறைசாற்றிக் கொண்டிருக்கும். 5% அல்லது 10% எச்சரிக்கை வகையிலான முன்னறிவிப்புகள் அகன்று விடுவதால் (நிறைவேறாமல் நீங்கிப் போவதால்) அவ்வாறு சந்தேகத்தைத் தோற்றுவிக்க முடியும்?

இதற்குரிய மூன்றாவது பதில் என்னவென்றால் சிறப்பு விதியின் கீழ் வெளியிடப்படும் செய்திகள் குறித்துதான் எதிரிகளுக்கு அதிகம் சந்தேகம் எழுகிறது. இவை இயற்கை விதிமுறைகளின் விளைவாக ஏற்படுவதில்லை. மாறாக ஆன்மீகத்தின் விளைவாக ஏற்படுகிறது.

உதாரணமாக, லேக்ராம் குறித்து, அவர் நபி (ஸல்) அவர்களை அவமதித்ததற்குத் தண்டனையாக கொல்லப்படுவார் என்றோ அல்லது அப்துல்லாஹ் ஆத்தம் குறித்து அவர் நபி (ஸல்) அவர்களை அவமதித்ததற்குத் தண்டனையாக அழிவுக்கு ஆளாவார் என்றோ அல்லது அஹ்மது பேக் மற்றும் அவருடைய மருமகன் குறித்து அவர்கள் மரணித்துவிடுவார்கள் என்றோ முன்னரிவிக்கப்பட்டது. ஆனால் இத்தண்டனைகளில் எவையும் எந்தவொரு இயற்கையின் விளைவாக நடைபெறவில்லை. லேக்ராம் யாரையாவது கொலை செய்திருந்து லேக்ராமும் கொலை செய்யப்படுவார் என கூறப்பட்டிருப்பின் விஷயம் வேறாக இருந்திருக்கும். அதுபோலவே ஆத்தம் மற்றும் அஹ்மது பேக் ஆகியோரைப் பற்றி அவர்கள் செய்த செயலுக்கு ஏற்பட்ட இயற்கை விளைவாக இருந்தால் ஆட்சேபிப்பதில் அர்த்தமிருக்கிறது. ஆனால் எந்த குற்றங்களுக்கு பிரதிபலனாக தண்டனைகள் நியமிக்கப்பட்டனவோ அக்குற்றங்கள் ஆன்மீகமானவை. அப்படிப்பட்ட தண்டனைகள் பற்றிய முன்னறிவிப்புகளில் சில முன்னறிவிப்புகள் நிறைவேறி விட்டாலும் அவற்றை அறிவித்தது இறைவன்தான் என்பதற்கு அவை சான்றாக அமையும். அவ்வாறில்லாதிருப்பின் விளிப்படையான காரணங்கள் இல்லாத நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒருவரால் முன்னறிவிக்க முடியும்? ஆன்மீக பாவங்களுக்கான தண்டனையைப் பற்றி இறைவனால் மட்டுமே முன்னறிவிக்க முடியும். ஆன்மீக விஷயத்தில் பாவியாக இருக்கும் ஒருவரைப் பற்றி அவருக்கு தண்டனை எவ்விஷயத்தில் கிடைக்கும் என்பதை பிறரால் எவ்வாறு கூறமுடியும்?

முன்னறிவிக்கப்படும் செய்திகளில் அதிகமான அப்போதைய நிலைமைகள் எடுத்துரைக்கப்படுகின்றன என நீங்கள் கூறுகிறீர்கள். அதாவது, இப்போது இவர் எந்த நிலைமைகளில் இருக்கின்றாரோ அதன் விளைவு இதுவாக இருக்கும் என அம்முன்னறிவிப்பில் கூறப்படுகிறது என்கிறீர்கள். அப்படியானால் உங்களுடைய அல்லது இன்னாருடைய தற்போதைய நிலைமைக்கு இன்ன விளைவுகள்தான் ஏற்படும் என ஏன் தெள்ளத் தெளிவாக கூறப்படுவதில்லை. அப்போதுதானே மக்களுக்கு கனவுகள், இறையறிவிப்புகள் மீது சந்தேகம் தோன்றாது என்று வினவினால் அதற்குரிய பதில், முதலில் இவர்களின் உள்ளத்தில் நோய் இருக்குமோ அவர்கள் எந்நிலையிலும் சந்தேகித்துக் கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் முன்னறிவிப்புகளில் தெளிவான முறையில் நிபந்தனைகள் கூறப்பட்டிருந்தும் அவற்றை மக்கள் ஆட்சேபிக்கின்றனர்.

உதாரணமாக பிளேக் நோய் பற்றிய முன்னறிவிப்புகளில் மற்ற கிராமகளுக்கு ஏற்படும் அழிவைப் போன்று காதியானில் பிளேக் நோய் ஏற்படாது என முன்னறிவிப்புகளில் தெளிவான முறையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அப்படியிருந்தும் காதியானில் ஒருவர் கூட அழிந்திருக்கக் கூடாது என்று மக்கள் ஆட்சேபிக்கின்றனர். இம்முறையை மேற்கொள்வதில் இன்னொரு பயனும் உண்டு. எந்த நோக்கத்திற்காக கனவு அல்லது முன்னறிவிப்பு செய்யப்பட்டதோ அந்த நோக்கம் நன்றாக நிறைவேறி விடுகிறது. உண்மை என்னவேனில் வருங்காலத்தைப் பற்றிய செய்திகள் கூறப்பட்ட எச்சரிக்கை வகையிலான கனவுகள் அல்லது இல்ஹாம் ஆகியவற்றில் உள்ள வேறு பல நோக்கங்களில் அந்த கனவு, இல்ஹாமில் எவரைப் பற்றி செய்தி கூறப்பட்டுள்ளதோ அவர் அதனை உணர்ந்து தன்னை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். என்பதும் ஒரு நோக்கமாகும். மேலும் எவர் சீர்திருந்தாவிட்டால் அவர் மீது சான்று நிலை நாட்டப்பட்டுவிடும். பிறகு அவருக்கு தண்டனை வழங்கலாம். அல்லாஹ் கூறுவதாவது:

இத்தூதர்களுக்குப் பின்னர் மக்கள் அல்லாஹ்வுக்கு எதிராக வாதாடாமலிருக்க, நற்செய்தியாளர்களும், எச்சரிக்கை செய்பவர்களுமான தூதர்களை அனுப்பினோம்.”(4:166)

சுர்க்கமாக, எச்சரிக்கை வகையிலான முன்னறிவிப்புகள் ஆட்சேபணை செய்யாமலிருக்கும் வகையில் அவர் மீது சான்றை முழுமைப்படுத்துவதற்காக ஏற்படுகின்றன. மேலும் அவற்றின் மூலம் எச்சரிக்கப்பட்டவருக்கு சீர்திருத்துவதற்கான கடைசி சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது. சீர்திருந்தாவிட்டால் சான்று நிலைநாட்டப்பட்டுவிடும். (பிறகு தண்டனைகள் கிடைக்கும்) (தொடர்ச்சி)