அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Friday, December 18, 2015

ஒவ்வொரு செயலையும் இறைவன் செய்ய வைக்கிறானா?

இந்த விதி விவகாரத்தால் என்ன பயன்? என்று அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை சிந்திக்கவில்லை. பயன் பெறுவதற்குப் பதிலாக நஷ்டமடையும் விதத்தில் அவர்கள் இந்த விவகாரத்தை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் கூறுகின்ற வகையில் எவரெல்லாம் ஏற்றுக் கொள்வாரோ அவரெல்லாம் நஷ்டமே அடைவார்.

உதாரணமாக அவர்களில் ஒரு பிரிவினர், மனிதன் செய்வதெல்லாம் இறைவன் செய்ய வைப்பதுதான் என்கின்றனர். இப்போது நாம் கேட்கிறோம்: இது சரியென்றால், ஒரு புறம் இறைவனே தீமையிலும் தீமையான

காரியங்களைச் செய்ய வைக்கிறான். மறுபுறம், நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? என்று திருக்குர்ஆனில் கண்டிக்கின்றான். இறைவன் தானாகவே மனிதனைப் பிடித்து கற்பழிக்க வைத்துவிட்டு, அவன் கற்பழிப்பு செய்யும்போது ஏன் கற்பழிக்கிறாய்? என்று கேட்பது விந்தைக்குரியதுதான். பின்னர் இறைவனே, அபூஜஹிலின் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்கள் பொய்யர் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறான். ரஸுலே கரீம் (ஸல்) அவர்களுக்கு விரோதமாக கை நீட்டுவதற்கு அவனே கூறுகின்றான். பின்னர் இவனுக்கு என்ன நேர்ந்தது? இவனுடைய அறிவு ஏன் மங்கி போயிற்று? என்று தானே கேள்வியும் கேட்கிறான்.

நாம் கூறுவதாவது, இவ்வாறு கூறுவது அநியாயமாகும். இறைவன், தானாகவே மனிதனின் மூலம் ஒரு தீய செயலைச் செய்ய வைத்து, தானே அம்மனிதனை கண்டித்துக் கேட்பது அநியாயம் மட்டுமல்ல; அறிவீனமாகும்.

இப்போது பாருங்கள்! இறைவனைப் பற்றி இந்த மாதிரியான கொள்கைகளைக் கொண்டிருப்பது எவ்வளவு நஷ்டத்தைக் கொடுக்கிறது? இந்த கொள்கையுடன் மனிதனுடைய ஈமான் ஒரு நிமிடத்திற்குக் கூட நிலைத்து நிற்க முடியாது. இதுதான் (கத்ர்) வாதிகளின் நிலைமை!

தத்பீர்வாதிகளின் தவறு

தத்பீர்வாதிகள் தாம் முன்வைத்துள்ள கொள்கையைப் பற்றி தாமே சிந்தித்தால், அவர்கள் மனிதனுக்கும் இறைவனுக்குமுள்ள தொடர்புகளைத் துண்டித்து விட்டிருப்பது அவர்களுக்குத் தெரிய வரும். ஏனெனில் தொடர்புகள் வலுப்பெறுவதும், அதிகமாவதும் அன்பின் காரணமாகவே ஏற்படுகிறது. இவர்களின் கொள்கையோ, மனிதனுக்கும் இறைவனுக்குமுள்ள அன்பையே முறித்து விடுகிறது.

தொடர்புகள் எவ்வாறு அன்புக்குக் காரணமாக அமைகின்றன என்பது குறித்து எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது.

ஒரு முறை ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தார்கள். மஹ்மூது, மஹ்மூது என்று என்னைக் கூப்பிட்டார்கள். நான் அருகே சென்றதும், கொல்கத்தாவில் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்றார்கள். அவர் இறந்தால் நமக்கென்ன? என்று ஆச்சர்யப்பட்டு நான் கேட்டேன். அப்போது அவர்கள் இது தொடர்ப்பின்மையின் விளைவாகும். அம்மனிதருடைய வீட்டிலோ அழுதுபுலம்பிக் கொண்டிருப்பார்கள், நீயோ எனகென்ன? என்று கூறுகிறாய் என்றார்கள்.

ஆக, தொடர்பினால் அன்பு உருவாகிறது என்பது புலனாகிறது. ஆனால் தத்பீர்வாதிகளின் கொள்கை இதற்கு மாற்றமாக இருக்கிறது. அவர்கள் கூறுவதாவது, இறைவன் பொருட்களைப் படைத்தான்; மனிதனைப் படைத்தான். தான் விரும்பிபடி செய்யுமாறு அவர்களை விட்டுவிட்டான். இது சரியானதென்றால், அடியாருக்கும் இறைவனுக்குமிடையே எவ்வாறு தொடர்பு நிலைபெற முடியும்? இறைவன் படைத்தவற்றுள் பயன்கள் இருகின்றனவென்றாலும், அவற்றில் நஷ்டங்களும்தான் இருக்கின்றன. உதாரணமாக இறைவன் நெருப்பைப் படைத்தான். அதில் சில நன்மைகள் இருக்கின்றனவென்றால் தீமைகளும் இருக்கின்றன. நெருப்பால் உணவு சமைகிறதென்றாலும், இலட்சக்கணக்கான ரூபாய்களையும், வீட்டையும் அது எரித்து சம்பலாக்கியும் விடுகிறது என்றெல்லாம் கூறுகிறார்கள்.

இவர்கள் விதியைப் பற்றி இவ்விதமாகத்தான் நம்ப வைத்திருக்கிறார்கள். இதனால் எல்லா அறிவுகளையும் படைக்கின்றவனாகிய இறைவன் மீது அவன் அறிவுக்குப் புறம்பான வேலை செய்கிறான் என்ற பழி சுமத்தப்படுகிறது. (நவூதுபில்லாஹ்) இரண்டாவது இறைவனுடன் மனிதனுக்கு இருக்கும் அன்பின் தொடர்பு முற்றிலும் முறிந்து விடுகிறது. ஏனெனில், இறைவன் படைத்த நெருப்பில் பயன்கள் இருந்தபோதிலும், அவற்றில் தீமைக்களும்தான் இருக்கின்றன. பின்னர் நெருப்பை படைத்ததில் இறைவன் என்ன நன்மை செய்து விட்டான்? இவ்விதமான எண்ணங்கள் தோன்றினால் இறைவனுடன் அன்பான தொடர்புகள் ஏற்பட முடியாது. இங்குள்ள மக்களுக்கு அமெரிக்காவிலுள்ளவர்களோடுள்ள மக்களுடன் என்ன தொடர்பு இருக்குமோ அதே போன்ற தொடர்புதான் எஞ்சியிருக்கும். இன்னும் சொல்லப்போனால், அதைவிட குறைவாகத்தான் இருக்கும். ஏனெனில் அமெரிக்காவிலிருந்தாவது பொருட்கள் வரவழைக்கப்படுகின்றன. ஆனால் இறைவனிடம் அந்த அளவுக்கு நம்பிக்கையும் இல்லை. சுருக்கமாக இம்மாதிரியான எண்ணங்கள் ஆன்மீகத்திற்கு எல்லைமீறிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

இப்போது நான் இந்த பிரச்சனைக் குறித்து திருக்குர்ஆனிலிருந்து நிரூபணமாகும் உண்மையைப் பற்றி கூறுகிறேன். முதலில் நான் அதனை விளக்குவேன். பின்னர் அதன் பயன்களைக் குறித்து எடுத்துரைப்பேன். ஆனால் விதி பிரச்சனையின் சில அம்சங்களை மார்க்கப் பெரியார்களால் கூட எடுத்துரைக்க முடியவுமில்லை; எடுத்துரைக்க அவர்கள் முயற்சிக்கவுமில்லை. என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். ஏனெனில் சில நுட்பமான விஷயங்கள் வெறும் ரசனையாகவே இருக்கின்றன. ரசனை என்று நான் சொன்னதன் கருத்து சாதாரணமாக மக்கள் கூறுகின்ற ரசனை அல்ல. அதாவது உண்மையுடன் எவ்வித தொடர்புமில்லாத ஆதாரமற்ற கூற்றுகள் என்ற கருத்தில் நான் கூறவில்லை. நான் கூற வந்ததன் கருத்து, மனிதன் அனுபவிக்காமல் அதனை பற்றி அறிந்து கொள்ள முடியாத விஷயங்கள் என்பதாகும். எனவே அந்த விஷயங்களை எனக்கு முன்னுள்ளவர்களாலும் எடுத்துரைக்க முடியவில்லை. என்னாலும் எடுத்துரைக்க முடியாது.