அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Monday, December 28, 2015

காரணிகளின்றி வெளியாகும் சிறப்பு விதி

காரணிகளுடன் கூடிய சிறப்பு விதியைத் தவிர காரணிகள் இல்லாமலேயே வெளிப்படக் கூடிய இன்னொரு சிறப்பு விதியம் உண்டு. அதுவும் இருவகைப்படும்.

1. உண்மையில் இவை காரணிகளின்றியே வெளியாகின்றனவென்றாலும் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தின் அடிப்படையில் அல்லாஹ் அத்துடன் காரணிகளையும் இணைத்துவிடுகின்றான்.

ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு வந்த

இல்ஹாமை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அஹ்மதிகளுக்குப் பொதுவாகப் பிளேக் நோய் ஏற்படாது என அந்த இல்ஹாமில் கூறப்பட்டிருந்தாலும், காலுறை அணிய வேண்டும் என்றும், மாலைக்குப் பிறகு வெளியே செல்ல வேண்டாம் என்றும். கொய்னா (QUININE) மருந்தை உபயோகிக்க வேண்டும் என்றும் ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்கள் அஹ்மதிகளுக்குக் கூறியிருந்தார்கள். இவையெல்லாம் காரணிகள்தான் என்றாலும். (அஹ்மதிகள் பிளேக் நோயிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்ற) இந்த தக்தீர் (விதி) காரணிகளின்றி ஏற்படக் கூடியதாகவே இருந்தது. எப்படியெனில், அஹ்மதியல்லாத மற்றவர்களும் அதிகமாக காலுறைகள், கையுறைகள் ஆகியவற்றை அணிந்திருந்தார்கள். பிளேக் நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு அஹ்மதிகளிடம் அதிக காரணிகள், மூலப்பொருள்கள் இருக்கவில்லை. உண்மை என்னவென்றால் அஹ்மதிகளின் உடலில் நுழைய வேண்டாம் என பிளேக் நோயை உண்டாக்கும் கிருமிகளுக்கு கட்டளையிடப்பட்டது. அத்துடன் அந்நோயிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளை கையாளுங்கள் என அஹ்மதிகளுக்கும் கட்டளையிடப்பட்டது. காரணம் என்னவென்றால், இந்தக் கட்டளை எதிரிகளின் முன்னாலும் செல்ல இருந்தது. பிறகு ஈமான் மற்றும் ஈமான் இல்லாத நிலை ஆகிய இரண்டிற்குமிடையே எவ்வித வித்தியாசமும் இல்லாமல் போய்விடும். காரணிகளைப் பயன்படுத்தாமலேயே அஹ்மதிகள் பிளேக் நோயினால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் அல்லது இந்தக் கட்டளையில் விதிவிலக்கே இல்லாமலிருந்திருந்தால் எல்லோருமே அஹ்மதிகளாக மாறியிருப்பார்கள். அப்போது இந்த ஈமான் மறைவானவற்றின் மீது கொண்ட ஈமான் ஆக இருக்கவே முடியாது.

2. இந்த விதியின் இரண்டாம் வகை, காரணிகள் இல்லாமலேயே வெளியாகின்றன: மேலும் அக்காரணிகள் அத்துடன் சேர்க்கப்படுவதுமில்லை.

இவ்வகை விதி (தக்தீர்) நபிமார்கள் மற்றும் முஹ்மின்கள் (நம்பிக்கை கொண்டவர்கள்) ஆகியோரின் முன் வெளியாகுமேயன்றி மற்றவர்களின் முன் வெளியாவதில்லை. ஏனெனில் மற்றவர்களின் முன் இவை வெளியானால் அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வதனால் கிடைக்கும் நற்கூலியை இழந்துவிடுவார்கள். ஆனால் மறைவானவற்றின்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் முஹ்மிங்களுக்கு (நம்பிக்கையாளர்களுக்கு) இவ்வகை தக்தீரின் மூலம் வெளிப்படையான ஈமான் வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் அவற்றின் மூலம் குறிப்பாக ஈமானில் முன்னேறுகிறார்கள்.

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) அவர்களின் வாழ்வில் அவர்களுடைய சட்டையில் சிவப்புத் துளிகள் விழுந்ததை இந்த தக்தீருக்கு உதாரணமாக கூறலாம். ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் ஒரு ருஹ்யாவில் (ஆன்மீகக் காட்சியில்) தாம் சில தாள்களை இறைவனிடம் எடுத்துச் செல்வதாகவும், இறைவன் அதில் கையெழுத்திடுவதற்காகப் பேனாவை தெளித்தபோது மைத்துளிகள் தமது ஆடைகளில் விழுந்ததாகவும் கண்டார்கள். ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு இந்த கஷ்ப் தோன்றியபோது அவர்களின் கால்களை மௌலவி அப்துல்லாஹ் சாஹிப் ஸனோரி அழுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முழங்கால்களில் சிவப்பு நிறத் துளி விழுந்ததைக் கண்ட வர்கள் அந்தித் தொட்டுப் பார்த்தார்கள். அது ஈரமாக இருந்தது. இது என்ன? என்று அவர் ஆச்சரியமடைந்தார்.

இந்த துளிகள் அசாதாரணமானவை அல்ல; மாறாக, ஏதோ வெளிக் காரணியினால் ஏற்பட்டதாகும் என உங்களுக்குத் தோன்றவில்லையா என நான் அவரிடம் கேட்டிருக்கிறேன். அவர் கூறினார்: எனக்குத் தோன்றியதுதான். நான் இங்குமங்கும் பார்த்தேன். ஒருவேளை பல்லியின் வால் துண்டிக்கப்பட்டு அதிலிருந்து ரத்தம் வழிந்திருக்குமோ என நினைத்து மேலே பார்த்தேன். அந்த சிவப்புத் துளிக்கான அடையாளம் ஏதும் தென்படவில்லை. ஆகவே ஹஸ்ரத் முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் விழித்தவுடன் நான் அவர்களிடம் கேட்டேன். முதலில் அவர்கள் தயங்கிய பின்னர் நடந்த உண்மையைக் கூறினார்கள்.

இவ்வாறு இறைவன் சிறப்பு விதியை எவ்வித காரணியுமின்றி ஒரு நபி மற்றும் அவரைப் பின்பற்றிய மௌலவி அப்துல்லாஹ் சாஹிப் அவர்களின் முன்னிலையில் வெளிப்படுத்தினான். ஏனெனில் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருந்த அவர்களுக்கு ஈமான் பிஷ் ஷஹாதத் எனும் கண்ணால் கண்டு ஈமான் கொள்ளும் வாய்ப்பை வழங்குவது அதன் நோக்கமாக இருந்தது.

சுருக்கமாக முஹ்மின்களின் நம்பிக்கையைப் புதுப்பிப்பதற்காகவும் இறைவல்லமைக்கான அத்தாட்சி அவர்களுக்குக் கிடைப்பதற்காகவும் அல்லாஹ் சில நேரங்களில் காரணிகளின்றியும் தக்தீரை வெளிப்படுத்துகிறான். ஆனால் காபிர்களுக்கு இவ்விதமான காட்சி காட்டப்படுவதற்கான தகுதிகள் இல்லை.

எல்லா நபிமார்களுக்கும் தலைவரான ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாழ்விலும் இதற்கான பல உதாரணங்கள் காணப்படுகின்றன. அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்லும் போது மக்கள் காபிர்கள் அன்னாரைப் பின் தொடர்ந்து, அவர்கள் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் மறைந்திருந்த ஸவ்ர் குகை வரை சென்றுவிட்டனர். காபிர்களுடனிருந்த துப்பறிபவர், இதுவரை தான் வந்துள்ளனர்; இதற்கப்பால் செல்லவில்லை என ஆணித்தரமாகக் கூறிய போதிலும் கீழே குனிந்து உட்பக்கம் பார்க்கக் கூடிய வாய்ப்பு அவர்களில் எவருக்கும் கிடைக்கவில்லை. ஆனால் உண்மையில் மூன்று மைல் வரை பின்தொடர்ந்து வந்து, தேடித்தேடி மலையின் மேலே ஏறிய அவர்களுக்கு, இதுவரை வந்துவிட்டோமே! குனிந்து பார்ப்போம் ஒருவேளை உள்ளே இருக்கலாம் என்று அவர்களின் மனதில் தோன்றியிருக்கவேண்டும். ஆனால் குறித்த இடத்தை எட்டியிருந்தும் கூட எவரும் தலையைக் குனிந்து குகையில் உள்ளே பார்க்கவில்லை. ‘அவர்கள் குனிந்து பார்த்தால் எங்களைப் பார்க்க முடிந்திருக்கும். அந்த அளவுக்கு குகையின்வாயில் அகலாமாக இருந்தது’ என்று ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். ஆகவே, வெளிப்படையான முறையில் எவ்வித காரணியும் இல்லாதிருந்தும் அவர்களின் உள்ளத்தை இறைவள்ளமை ஆட்கொண்டிருந்தது.

இவ்வகையான தக்தீர் மிகக் குறைவாக வெளியாகின்றது. மேலும் இது குறித்து முஹ்மின்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படுகிறது. அப்போதுதான் அவர்களின் ஈமான் அதிகரிக்கும். ஸவ்ர் குகையின் சம்பவத்திலும் கூட காபிர்கள் அங்கு இருந்தார்கள் என்றாலும் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு இருக்கிறார்கள் என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. இதனை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களும் மட்டுமே அறிந்திருந்தார்கள்.

ஒருமுறை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தண்ணீரை அதிகப்படுத்தியதும் இவ்விதமான தக்தீரின் வகையைச் சார்ந்ததாகும். இன்றைய மக்கள் இந்த அடையாளத்தை மறுத்தாலும் மறுக்கலாம். ஆனால் ஹதீஸ்களில் இது பற்றி எந்த அளவுக்கு ஏராளமான அறிவிப்புகள் வந்துள்ளனவென்றால் எந்தவொரு முஸ்லிமும் இதனை மறுக்கமுடியாது. ஆயினும் இந்த அடையாளம் முஸ்லிம்களின் முன்னால் மட்டுமே நிகழ்ந்தது. காரணம், காபிர்களின் முன்னால் இவ்வாறான அடையாளம் வெளிப்பட்டால் அவர்களுக்கு மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது போய்விடும் அல்லது அப்படிப்பட்ட தெளிவான அடையாளத்தைக் கண்டும், மந்திரவாதி – மாயக்காரர் என்றெல்லாம் கூறி விரைவில் சூழ்ந்து கொள்ளும் இறை தண்டனைக்கு ஆளாகியிருப்பார்கள். இது ‘ரஹ்மானியத்’ எனும் இறைபண்பிற்கு மாற்றமானது.