தக்தீர் என்பதன் பொருள் பொது மக்கள் கருதுகின்ற, தத்துவவாதிகள் நம்பிக் கொண்டிருக்கின்ற அதே பொருள் அல்ல என்பது இதுவரை கூறியதிலிருந்து தெரிய வருகிறது. அதாவது எதைச் செய்தாலும் அது மனிதன் செய்வதுதான் என்பதோ அல்லது செய்வதெல்லாம் இறைவன் செய்ய வைப்பவைதான்; நமக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்பதோ தக்தீர் (இறை நியதி) ஆகாது. மாறாக, தக்தீர் என்பது இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வழியாகும். அதுதான் சரியானதும், இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்றதுமாகும். இப்போது தக்தீருக்கும் மனித செயல்களுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி சிறிது விளக்கமாகக் கூறுகிறேன்.
முதலில் கூறியுள்ளதைப் போன்று, தக்தீர் பலவகைப்படும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, சாதாரண இயற்கை விதி, சிறப்பான இயற்கை விதி, சாதாரண மார்க்க விதி, சிறப்பான மார்க்க விதி ஆகியவை. இவற்றில் சாதாரண இயற்கை விதி மட்டுமே எல்லா மனிதர்களுடன் தொடர்புடையது. இறைவன் சில சட்டங்களை ஏற்படுத்தியுள்ளான். அவற்றின்படியே முழு உலகமும் இயங்குகிறது. அதாவது ஒவ்வொன்றிலும் சில குறிப்பிட்ட தன்மைகளைப் படைத்துள்ளான். அவை தமக்குரிய அப்பணியை தன் வட்டத்திற்குள்ளேயே நிறைவேற்றுகின்றன.
உதாரணமாக, தீயில் எரியக் கூடிய ஆற்றல் வைக்கப்பட்டுள்ளது. எனவே எரியும் தன்மை கொண்ட பொருளைத் தீ பற்றிக் கொண்டால் அத்தீ அப்பொருளை எரித்துவிடும். அப்பொருள் எரிவது தக்தீரின் (விதி) கீழ் நிகழக் கூடியதாகும். ஆனால் இன்ன மனிதர் இன்னார் வீட்டைக் கொளுத்த வேண்டும் என இறைவன் விதிக்கவில்லை. பொருட்களின் தன்மையை படைத்தது இறைவன் என்றாலும் அவற்றைப் பயன்படுத்துமாறு யாரையும் அல்லாஹ் வற்புறுத்துவதில்லை.
திருடன் திருடும் போது, அவன் பிறருடைய பொருளை எடுக்கும்போது அப்பொருள் அவனிடம் வந்து விடுவது தக்தீர் (விதி) தான். ஆயினும் ஸய்த் என்பவன் பக்ர் என்பவரின் பொருளைத் திருட வேண்டும் என்று இறைவன் விதிக்கவில்லை ஸய்துக்கு அப்பொருளை எடுப்பதற்கான அல்லது எடுக்காதிருப்பதற்கானா ஆற்றல் இருந்தது.
அல்லது உதாரணமாக மழை பெய்கிறது. அது ஒரு பொதுவான விதியின்படி ஏற்படுகிறது. இன்ன இடத்தில் இன்ன நேரத்தில் மழை வர வேண்டும் என மழை குறித்து அல்லாஹ்வின் குறிப்பான கட்டளை ஏதும் இல்லை. ஆகவே மழை பெய்வது ஒரு விதி (தக்தீர்) ஆகும். ஆனால் குறிப்பிட்ட விதியல்ல. பொதுவான விதியாகும். இறைவன் நியமித்துள்ளான். அந்த நியதியின்படி மழை வருகிறது. சூழ் நிலைகளுக்கேற்றவாறு மழை பொழிகிறது.
ஆனால் நான் கூறியது போன்று இந்த சாதாரண தக்தீரைத் தவிர வேறு தக்தீர்கள் உள்ளன. அவற்றில் அல்லாஹ்வின் சிறப்பான கட்டளைகள் இறங்கும்போது சாதாரண விதிகள் சிறப்புக் கட்டளைகேற்றவாறு மாற்றியமைக்கப்படுகின்றன. அல்லது சாதாரண விதிமுறைகள் முறியடிக்கப்படுகின்றன. ஹஸ்ரத் இப்ராஹீம் (நபி) அவர்களை நெருப்பில் இட்ட போது இவ்வாறே நடந்தது. எனினும் இந்த விதி எல்லாருக்கும், எல்லா நாளும் இறங்குவதில்லை. மாறாக, இவ்விதிகள் குறிப்பிட்ட அடியார்களுக்காக மட்டுமே வெளியாகின்றன. அவை அவர்களின் உதவிக்காக மட்டுமே வெளியாகின்றன. அவை அவர்களின் உதவிக்காக அல்லது அவர்களின் எதிரிகளின் அழிவுக்காக வெளியாகின்றன. ஏனெனினில் சிறப்பானவர்களுடன் சிறப்பான முறையில் நடந்து கொள்ளப்படுகிறது.
ஒரு மனிதனின் இரக்கமான நிலைமையும் இந்த மாதிரியான சிறப்பு விதி இறங்குவதற்குக் காரணமாக அமையக் கூடும் – அம்மனிதர் அவ்வளவு நல்லவராக இல்லாதிருந்தாலும் சரியே! அவருடைய நிலைமை குறிப்பான இறக்கம் காட்டப்பட வேண்டியதாக இருக்கும் சமயத்திலும் இறைவனின் ரஹ்மானிய்யத்(கருணை) எனும் பண்பு அவனுடைய காதிரிய்யத் (வல்லமை) என்ற பண்பைத் தூண்டிவிடுகிறது. மேலும் அது அந்த அப்பாவியானவரின் துன்பத்தைப் போக்குகிறது; அல்லது அந்த அப்பாவியின் மீது அநீதி இழைத்தருக்குத் தண்டனை கொடுக்கிறது. இப்படி இறங்கும் சிறப்புவிதி சிலவேளை மனித உறுப்புகளின் மீதும் இறங்குகிறது. அதாவது மனிதனைக் கட்டாயப்படுத்தி அவனால் ஒரு வேலையை செய்ய வைக்கிறது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட சொல்லைக் கூற வேண்டுமென்று நாவிற்கு கட்டளையிடப்படுகிறது. சொல்பவரின் மனம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருக்கு அச்சொற்களைக் கூற வேண்டியுள்ளது. அதனைத் தடுக்க அவரால் முடியாது.
அல்லது சில நேரத்தில் கைக்கு ஒரு கட்டளையிடப்படுகிறது; இன்னும் சில வேளை முழு உடலுக்கும் ஏதாவதொரு கட்டளையிடப்படுகிறது. அப்போது மனிதன் தன் கையையோ, முழு உடலையோ கட்டுப்படுத்தவே முடியாது. அவை இறைவனுடைய அதிகாரத்தில் இருக்கும்.
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கு நேர்ந்த ஒரு சம்பவம் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் தம் கிலாபத்தின் காலக்கட்டத்தில் மேடையில் நின்று குத்பா கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தன்னையுமறியாமல் அவர்களின் நாவில் ‘யா சாரியத்தல் ஜபல்; யா சாரியத்தல் ஜபல்; (பொருள்: சாரியா அவர்களே! மலையின் மேல் ஏறிவிடுங்கள். சாரியாவே! மலையின் மேல் ஏறுங்கள்!) என்ற சொற்கள் வெளியாயின. இந்த சொற்கள் குத்பாவோடு சம்பந்தமில்லாதவையாக இருந்ததால் நீங்கள் ‘ஏன் இப்படி கூறினீர்கள்?’ என மக்கள் வினவினார்கள். அதற்கு ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள், ‘இஸ்லாமிய படைத் தளபதியான சாரியா ஓரிடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். எதிரிகள் அவருடைய பின்பக்கத்திலிருந்து தாக்க முனைகின்றனர். இஸ்லாமிய படை அழிந்து விடுமளவுக்கு தாக்க முயற்ச்சித்தனர். அப்போது அருகிலேயே ஒரு மலை இருந்ததைக் கண்டேன். அதன் மேல் ஏறி எதிரிகளின் தாக்குதலிலிருந்து தப்பித்து விடலாம் எனத் தோன்றியது. எனவே நீங்கள் அந்த மலையில் ஏறிக் கொள்ளுங்கள் என்று நான் குரல் கொடுத்தேன்’ என்று பதிலளித்தார்கள்.
இன்னும் அதிக நாள் ஏதும் கழிந்திருக்க வில்லை. சாரியாவிடமிருந்தும் இதே போன்ற ஒரு தகவல் கிடைத்தது. ‘அப்போது ஒரு குரல் தோன்றியது. அக்குரல் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் குரலை ஒத்திருந்தது. அதுவே அபாயத்தைப் பற்றி எங்களுக்கு அறிவித்தது. எனவே நாங்கள் மலை மேல் ஏறி எதிரிகளின் தாக்குதலிலிருந்து தப்பித்தோம் என சாரியா அவர்கள் அதில் எழுதியிருந்தார்கள். ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் நாவு தம் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமலிருந்தது என்பதும் தூரம், தொலைவு ஆகியவை ஒரு பொருட்டாக இல்லாத அந்த ஆற்றல் மிக்க இறைவனின் பிடியில் இருந்தது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.
சுருங்கக் கூறின், தக்தீர் சிலவேளை உடலுறுப்புகளின் மீதும் வெளிப்படுகிறது. அல்லாஹ் கட்டாயமாக வேலையைச் செய்ய வைக்கின்றான் என்று சிலர் நம்புவதைப் போன்றோ அவன் மனிதனுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவன் ஒரு கருவியைப் போன்றோ அல்லது தானாகவே அசையக் கூடிய சக்தியில்லாத இறந்தவனைப் போன்றோ ஆகிவிடுகின்றான். அவன் உயிருடன் இருக்கின்ற ஒருவனின் பிடியில் இருக்கின்றான். அவன்தான் விரும்புவதை அவன் மூலம் செய்ய வைக்கிறான். ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் இந்த சம்பவம் இவ்வாறான தக்தீரின் கீழ் நடந்ததுதான். இதற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்புமில்லை, இல்லையெனில் இவ்வளவு தொலைவு வரை தம் குரலை எட்ட வைக்க அவர்களுக்கு எங்கே ஆற்றல் இருந்தது?
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அனைத்து முஹ்ஜிஸாக்களின் (அற்புதங்களின்) உறைவிடமாவார்கள். இவ்வகையான தக்தீரின் உதாரணம். அவர்களின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது. அவர்கள் ஒரு முறை போரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு காட்டில் பகல் வேளையில் ஓய்வெடுப்பதற்காகத் தங்கினார்கள். எல்லா நபித்தோழர்களும் இங்குமங்கும் தனித்தனியாக உறங்கச் சென்றார்கள். எவ்விதமான அபாயமும் இல்லாதிருந்தபடியால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் ஓரிடத்தில் படுத்துவிட்டார்கள். திடீரென்று கண்விழித்ததும், ஒரு காட்டரபியின் கையில் தமது வாளைக் கண்டார்கள். அவன் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் முன்னால் வாளேந்தி, இப்போது உம்மை யார் காப்பாற்றுவார்? எனக் கேட்டான். ‘அல்லாஹ்’ என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறி முடிப்பதற்குள் காட்டரபியின் கையிலிருந்த வாள் கீழே விழுந்துவிட்டது. அந்த நேரத்தில் அவனுடைய கையிலிருந்த வாள் கீழே விழக்கூடாது என முழு உலகமும் சேர்ந்து முயற்சித்தாலும் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் மனிதன் அந்த இடத்திற்கு சென்றடைவதற்கு நேரமாகிவிடும். இறைவனைத் தவிர வேறு யாராலும் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறான குறிப்பிட்ட காலகட்டத்தில் அல்லாஹ்வின் குறிப்பிட்ட அடியாருக்காக குறிப்பிட்ட தக்தீர் (விதி) வெளியாகின்றது.
மூளை சரியாக இருந்தவரும், இறைத் தூதரைக் கொல்ல வேண்டும் என எண்ணியவருமான அந்த காட்டரபியின் கை அசையக் கூடாது என்று இறை தக்தீர் இறங்கியது. எனவே அது அசையவில்லை. இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட ஒருவரின் உடலுறுப்பின் மீது இறங்கிய ஒரு தக்தீர் (விதி) ஆகும்.
இத்தகைய விதிகள் இருக்கும்போது மனிதன் கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டவன் என்று ஒருவர் கூற முடியுமா? என்றால் இல்லை. ஏனெனில் இவை இருந்த போதிலும் மனிதன் கட்டாயத்திற்குள்ளாக்கப்படவில்லை; மாறாக, அது குறித்து விசாரிக்கப்படுவான். ஏனென்றால் இந்த விதி எல்லா நேரமும் வெளியாவதில்லை. குறிப்பிட்ட நிலைமைகளிலேயே வெளியாகின்றன. மனிதன் கட்டாயத்திற்குள்ளாகக் கூடிய, நற்கூலி தண்டனை ஆகியவற்றின் வட்டத்தை விட்டு அவனை வெளியேற்றக் கூடிய எந்தவொரு தக்தீரும் வெளியாவதில்லை.
இந்த மாதிரியான தக்தீர் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களை உதாரணமாக இன்னும் கூறலாம்.
அஹ்ஸாப் போரில் அரபிகள் எல்லோரும் சேர்ந்து மொத்தமாக முஸ்லிம்களைத் தாக்கினார்கள். மதீனாவை எதிரிகள் தாக்கினால் மதீனாவிலுள்ள முஸ்லிம்களும், யூதர்களும் சேர்ந்து அவர்களோடு போரிடுவோம் என ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுடன் உடன்படிக்கை செய்திருந்தார்கள். எனவே அச்சமயத்தில் முஸ்லிம்களுக்கு உதவி செய்வது யூதர்களின் கடமையாகும். ஆனால் யூதர்கள் இந்த உடன்படிக்கைக்கு நேர் மாறாக, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் எதிரிகளிடம், ‘நீங்கள் வெளியே ஆண்களைத் தாக்குங்கள்; நாங்கள் நகரத்தில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் கொண்டு விடுகிறோம் என சதித் திட்டம் போட்டார்கள்.
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வெளியே போரிடுவதர்க்காகச் சென்ற போது நிராகரிப்பவர்கள் போரிடவில்லை! நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து யூதர்களிடம் ‘இப்போது கூறுங்கள். உங்களோடு எவ்வாறு நடந்து கொள்வது? உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். கருணையுள்ளம் கொண்ட ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அந்த யூதர்களுக்கு தண்டனை கொடுத்திருந்தால், ‘இன்று உங்கள் மீது எந்த பலவந்தமும் இல்லை’ என்று கூறி மக்கத்தினருக்கு வழங்கிய அதே (மன்னித்து, விட்டுவிடும்) தண்டனையைத்தான் கொடுத்திருப்பார்கள். அதாவது அவர்களை மன்னித்திருப்பார்கள். ஆனால் (யூதர்களாகிய) அவர்களோ, நாங்கள் உங்கள் தீர்ப்பை ஏற்க மாட்டோம் எனக் கூறிவிட்டார்கள்.
இதை இறைவனே அந்த யூதர்களின் வாயால் சொல்ல வைத்திருக்கிறான் என்றே கூறவேண்டும். ஏனெனில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தமது பகைவர்களுடன் மென்மையாக நடந்துகொண்டதாகத்தான் அந்த யூதர்கள் பல ஆண்டுகளாக அனுபவத்தால் கண்டு வந்திருந்தார்கள். அவ்வாறிருந்தும், நாண்கள் உங்கள் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என்றனர். பின்னர் யார் தீர்ப்பை ஏற்பீர்கள் என்று வினவப்பட்டபோது அந்த யூதர்கள் ஹஸ்ரத் ஸஅத் (ரலி) அவர்களின் பெயரைச் சொன்னார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று ஸஅத் (ரலி) அவர்களிடம் கேட்டபோது, இவர்களில் வாளேந்தியிருக்கும் இளைஞர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்கள். அவ்வாறே செய்யப்பட்டது.
யூதர்களின் நாவின் மூலமாக இந்த தக்தீர் (விதி) ஏன் வெளிப்பட்டது? ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் கருணை மற்றும் அவர்களின் அந்தஸ்தின் காரணமாக இந்த தக்தீர் நாவின் மூலமாக வெளிப்படுவது சாத்தியமில்லாததாக இருந்தது. அவ்வாறு வெளிப்பட்டால் அவர்களின் உள்ளம் மிகக் கடினமானது என்றாகிவிடும். ஆனால் நிராகரிப்பலர்களின் நாவில் வெளிப்படலாம். ஏனெனில் அவர்களின் உள்ளங்கள் ஏற்கனவே கடினமாயிருந்தது.
ஆகவே நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்க மாட்டோம்; இன்னாரின் பேச்சைத்தான் கேட்போம் என யூதர்கள் கூறுவதன் மூலம் இந்த தக்தீர் அவர்களின் வாயிலிருந்தே வெளியானது.
செயல்கள், நாக்கு ஆகியவற்றின் மீது வெளியாகும் இவ்விரு தக்தீர்களும் மார்க்க ரீதியிலான செயல்களில் நிகழ்வதில்லை எனபதை நினைவில் கொள்ளவேண்டும். காரணம், மார்க்க ரீதியிலான செயல்கள் குறித்து மறுமைநாளில் கேள்வி கணக்குக் கேட்கப்படும். எனவேதான் இறைவன் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களை வலுக்கட்டாயமாக தொழ வைக்கவில்லை; வலுக்கட்டாயமாக செய்தான் என்றால் அது ‘சாரியாவே! நீர் மலையின் மீது எரிக் கொள்ளும்’ என்று நாவில் வெளிப்படுத்தியதுதான்.
அவ்வாறே இறைவன் யூதர்களை வலுக்கட்டாயமாக தொழுகையிலிருந்து தடுக்கவோ அல்லது நபி (ஸல்) அவர்களின் மீது ஈமான் கொள்ளாதிருக்கவோ செய்யவில்லை. மாறாக யூதர்கள் தம் செயலுக்கேற்ற பலனைப் பெற வேண்டும் என்ற விதியை இறக்கினான்; இந்த தக்தீர் மார்க்க சட்டரீதியான செயல்களின் மீது இறங்குவதில்லை. மார்க்க சட்டத்தின்படி தண்டனைக்கு ஆளாகாத செயல்களிலேயே இவ்வகையான தக்தீர் இறங்கும். ஏனெனில் மார்க்க செயல்களின் விஷயத்தி விதி விதிக்கப்பட்டிருந்தால் அதாவது பலவந்தமாக திருட வைத்தால் அல்லது வலுக்கட்டாயமாக தோழ வேண்டும் என வற்புறுத்தப்பட்டால் அதன் மூலமாக நற்கூலியோ தண்டனையோ கிடைப்பதர்க்குக் காரணமில்லாமல் போய்விடுகிறது. அதுமட்டுமன்று; அவ்வாறான சூழ்நிலைகளில் தண்டனை வழங்குவது அநீதியாகிவிடும். இறைவன் அநீதியிழைப்பதிலிருந்து தூய்மையானவன்.