அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Sunday, December 13, 2015

இறையறிவையும், விதி விவகாரத்தையும் ஒன்றோடொன்று கலத்தல்


உண்மை என்னவெனில், தக்தீர் என்பது, நடப்பதெல்லாம் இறைவனே செய்ய வைக்கிறான்; நமக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிடுபவர்களின் கருத்து வஹ்தத்துல் வுஜூத் எனும் (அத்வைதக்) கொள்கையை அடிப்படையாகக் கொண்டதென்றும் அவர்களுக்கு இன்னொரு விவகாரத்தால் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவே முஸ்லிம்களை அதிக குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. அதாவது, அவர்கள் இறையறிவையும், விதியையும் ஒன்றுடன் ஒன்று இணைத்துவிட்டார்கள். ஆனால் இவ்விரு விவகாரங்களும் முற்றிலும் தனித்தனியானவையாகும். இதற்குரிய தெளிவான சான்று என்னவென்றால், இறைவனின் ஒரு பெயர் ‘அலீம்’

(அறிந்தவன்), மற்றொரு பெயர் ‘கதீர்’ (ஆற்றல் மிக்கவன்) என்பதாகும், இங்கு எழும் கேள்வி, இறை அறிவும், விதியும் (தக்தீரும்) ஒன்றுதான் என்றால் இறைவனுக்கு தனித்தனியாக இவ்விரு பெயர்கள் ஏன் வழங்கப்படவேண்டும்?

கத்ர் (விதி) என்பது கதீர் என்ற பண்புப் பெயருடன் தொடர்புடையது. அதாவது ஆற்றல் பெற்றவன். மேலும் இல்ம் (அறிவு) என்பது ‘அலீம்’ என்ற பண்புப் பெயருடன் தொடர்புடையது. அதாவது எல்லாம் அறிந்தவன். ஆனால் அவர்கள் இதனைப் புரிவதில்லை.

அவர்கள் கூறுகிறார்கள்: ஸய்த் திருடப் போகும் போது, ஸய்த் திருடப் போவான் என்று இறைவனுக்கு தெரியுமா தெரியாதா? தெரியுமென்றால், ஸய்த் திருடவில்லையென்றால் இறைவனின் அறிவு பொய்யாகிவிடம். எனவே, ஸய்த் திருடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டான் என்று தெரிகிறது. மேலும் இறைவனே அவனை அவ்வாறு செய்வதற்கு கட்டாயப்படுத்துகிறான் என்பதும் தெரிகிறது. அவன் அவ்வாறு செய்யவில்லையென்றால், இறைவனின் அறிவு பொய்யாகிவிடும். இவ்விதமாக இவர்கள் பொது மக்களை இந்த கருத்தின் மூலம் வெற்றி கொண்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு செயலையும் இறைவனே செய்ய வைக்கிறான் என்று மக்களை நம்ப வைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த அறிவிலிகள் விஷயத்தை நேர்மாறாக எடுத்துச் செல்கிறார்கள்.

நாம் கூறுகிறோம்: ஸய்த் திருடுவான் என்று இறைவனுக்கு தெரிந்துவிட்டால் அவன் திருடாமல் இருக்க முடியாது என்று கருதுவது தவறாகும். மாறாக, ஸய்த் திருட்டை விடுவதாக இல்லை. எனவே அவன் திருடுவான் என்பது இறைவனுக்கு தெரிய வந்தது.

இதற்குரிய உதாரணமாவது, ஒருவர் நம்மிடம் வருகிறார். அவர் இந்த இடத்தில் கொள்ளையடிக்கப்போகிறார் என்று அவருடைய பேச்சிலிருந்து நமக்கு தெரிய வருகிறது. அவர் இந்த இடத்தில் கொள்ளையடிக்கப்போகிறார் என்று நாம் தெரிந்து கொண்டதனால் அவர் கொள்ளையடிக்குமாறு பலவந்தப்படுத்தப்பட்டார் என்றும் நாம்தான் அவரைக் கொள்ளையடிக்கவைத்தோம் என்றும் எந்தவொரு அறிவாளியாவது கூறுவாரா? ஒருபோதும் கூறமாட்டார். இதே நிலைமைதான் இறைவன் அலீம் (அறிந்தவன்) ஆக இருப்பதில் இருக்கிறது. ஸய்த் என்பவன் இன்று செய்ய வேண்டிய வேலையை இறைவனின் பலவந்தம் இல்லாமலேயே செய்யவிருந்தான். ஆனால் இறைவன், எல்லாம் நன்கு அறிந்தவன். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் அவனுக்கு தெரியும். எனவே ஸய்தைப் பற்றியும், அவன் அவ்வாறு செய்வான் என்பது அவனுக்குத் தெரியவந்தது.

அவ்வாறே ஸய்த் திருட்டை விட்டுவிடுவதாக இல்லை. மாறாக திருட்டை செய்யவிருந்தான். எனவேதான் அவன் திருடுவான் என்று இறைவன் அறிந்துகொண்டான். மேலும் எவன் திருட்டை விட்டுவிடுவானோ அவனைப்பற்றி, அவன் திருட்டை விட்டுவிடுவான் என்ற இல்ம் (அறிவு) இறைவனுக்கு இருக்கிறது.

ஆக, இறையறிவு எந்தவொரு செயலையும் செய்வதற்கு காரணமாக இருக்காது. மாறாக, நடக்க விருக்கும் ஒரு செயல்தான் இறையறிவின் கீழ் வரக் காரணமாக இருக்கிறது.

மேலும் தெளிவான விளக்கம்

சில சகோதரர்கள் இதனைப் புரியாமல் இருக்கலாம். எனவே மீண்டும் கூறுகிறேன். ஒவ்வொரு செயலையும் இறைவனே செய்ய வைக்கிறான் என்று கூறும் சிலர் அதற்க்கு ஆதாரமாகக் கூறுவதாவது, அப்துல்லாஹ் இந்த நாளில் திருடுவான் அல்லது கொள்ளையடிப்பான் என்பது இறைவனுக்கு தெரியுமா தெரியாதா? இறைவனே இல்லை என்ற நாத்திகர்களின் வாதத்தை சரி என்று ஏற்றுக் கொண்டால், அப்துல்லாஹ் எது செய்தாலும் அவர் அதை தனது சொந்த விருப்பத்தால் செய்வார் என்று கூற முடியும். ஆனால் இறைவனோ இருக்கின்றான். எனவே அப்துல்லாஹ் இந்த நாளில் இந்த வேலையை செய்வான் என்பது இறைவனுக்கு தெரியும் அப்படியிருக்கும்போது அந்த நாளில் அவர் அந்த வேலையை செய்யவில்லை யென்றால் இறைவன் அறிந்து கொண்டது தவறானதாகிவிடும். எனவே அவர் அந்த நாளில் திருடுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும், இறைவனே அவரை கட்டாயப்படுத்துகிறான் என்பதே இவர்களின் வாதம்.

நாம் கூறுவதாவது, அப்துல்லாஹ் இந்த நாளில் திருடுவான் என்று இறைவன் அறிந்து கொண்டதால் அவர் திருடுவதில்லை, மாறாக, அப்துல்லாஹ் அந்த நாளில் திருட இருந்ததால்தான் அது பற்றிய அறிவு இறைவனுக்குக் கிடைத்தது.

இதற்கு மாறாக, அவர் திருட வேண்டும் என இல்லாதிருந்து, அவர் திருடுவார் என இறைவனின் அறிவுக்கு வந்திருந்தால் அது அறிவீனம் என்று அழைக்கப்படுமே தவிர ‘அறிவு’ என்று அழைக்கப்படமாட்டாது.

சுருங்கக் கூறின், இந்த ஏமாற்றம் இறையறிவையும், இறை நியதியையும் இணைத்ததன் காரணமாக ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டும் தனித்தனியான பண்புகளாகும். மேலும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் மாறுபட்டதாகும்.