அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Thursday, December 31, 2015

தக்தீர் வெளியாகும் போது காரணிகளை பயன்படுத்துவது ஆகுமானதா இல்லையா?

தக்தீர் (இறை நியதி) வெளிப்படும்போது காரணியைக் கையாள்வதற்கான ஆற்றல் மனிதனுக்கு இருக்குமா இல்லையா? ஆற்றல் இருக்குமென்றால் அந்த காரணிகளை பயன்படுத்துவதற்கான அனுமதி இருக்கிறதா இல்லையா? என்பது குறித்து தற்போது கூறுகிறேன்.

உடல் உறுப்புகளின் மீது வெளிப்படும் தக்தீருக்கு எதிராக காரணிகளைக் கையாளும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் நாவுக்கு ஒரு குறிப்பிட்ட சொற்களை சொல்லும்படியாக கட்டளையிடப்பட்டதும், உலகில் ஏதாவதொரு

பொருளை உபயோகித்து அதன்மூலம் இந்த சொற்களைச் சொல்வதிலிருந்து தம் நாவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் அவர்களுக்கு இருந்ததில்லை.

அவ்வாறே நிராகரிப்பாளரின் கையிலிருந்தும் வாள் நழுவி விழ வேண்டும் என்றும், அவரால் நபி (ஸல்) அவர்களின் மீது தாக்குதல் நடத்த முடியாது என்றும் இறைநியதி வெளியான போது அதற்கு எதிராக செயல்பட அந்த நிராகரிப்பாளரால் முடிந்ததில்லை.

இதே போன்று உள்ளத்தில் இறை நியதி தோன்றும்போது அதற்கு எதிராக – மாற்றமாக மனிதனால் எதுவும் செய்ய இயலாது. ஆனால் எந்த தக்தீர் மனிதனின் உடலுறுப்புகளின் மீது வெளியாகாமல் மற்ற இடங்களில் வெளியாகின்றதோ அல்லது மனிதனின் சிந்தனைக்கு உட்படாமல் இயற்கையாகவே வேலை செய்து கொண்டிருக்கும் மனித உடலுறுப்பு ஏதாவதொன்றில் தக்தீர் வெளியாகின்றதோ அப்போது காரணிகளை உபயோகிக்கும் ஆற்றல் கிடைக்கிறது.

இவ்விதமான நிலைமையில் இரண்டு நிலைகள் உள்ளன.

1. இறைவன் புறமிருந்து தக்தீர் இறங்கியுள்ளது என்பது அவருக்குத் தெரிந்து விடுகிறது. 2. இறைவன் புறமிருந்து ஏதாவதொரு தக்தீர் இறங்கியுள்ளது என்பது அவருக்குத் தெரியாமலிருக்கிறது. தக்தீர் வெளியாகியுள்ளது என்பதே தெரியாதிருக்கும் நிலையில் அவர் காரணிகளை உபயோகிக்கிறார் எனில் அது அவருக்கு பாவமாகாது. ஆனால் இறைவன் இந்த தக்தீரை இறக்கியிருக்கிறான் என்பது அவருக்குத் தெரியும்போது அதற்கும் இரு நிலைகள் உள்ளன:

1. சில காரணிகளை அல்லது எல்லா வகையான காரணிகளையும் கையாள வேண்டும் என இறைவனிடமிருந்தே அவருக்குக் கட்டளை இறங்குகிறது. அதாவது, தக்தீர் ஏற்படுகிறதென்றாலும் அது காரணிகளைச் சார்ந்திருக்கிறது. உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் வெற்றிபெறுவது விதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் அவ்வெற்றி ‘புனிதப் போர்’ எனும் காரணிகளைச் சார்ந்திருக்கிறது. எனவே அப்படிப்பட்ட நேரத்தில் காரணிகளை பயன்படுத்துவது கட்டாயமானதாகிவிடுகிறது.

2. காரணிகளைச் சாராத தக்தீர், சில நேரங்களில் காரணிகளை பயன்படுத்தக் கூடாது எனவும் அப்படி பயன்படுத்தினால் அவருக்கு நஷ்டம் ஏற்படும் எனவும் இறைவனிடமிருந்து கட்டளை இறங்குகிறது. அப்போது காரணிகளைக் கையாளாமல் இருப்பது அடியாருக்குக் கடமையாகிவிடுகிறது. அப்போது காரணிகளைக் கையாள்வாராயின் நஷ்டத்திற்குள்ளாவது மட்டுமல்லாது இறை கோபத்திற்கும் ஆளாவார். இதன் முக்கிய நோக்கம், காரணிகளின்றியும் இறைவனால் காரியத்தைச் செய்ய முடியும் என்று அடியாருக்கு உணர்த்துவதேயாகும்.

இதற்கு எடுத்துக் காட்டாக இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு நடந்த ஒரு நிகழ்வை முன் வைக்கிறேன். ஒருமுறை முன்னறிவிக்கப்பட்ட இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு கடும் இருமலாக இருந்தது. அப்போது தன் மகன் முபாரக் அஹ்மதுக்குச் சிகிச்சை நடைபெற்றதால் முழு இரவும் அவர்கள் விழித்துக் கொண்டிருந்தார்கள். நான் கூட அந்நாட்களில் இரவு 12 மணிக்கு உறங்கி அதிகாலையில் சீக்கிரமே விழித்து விடுவேன். ஆனால் நான் உறங்கச் செல்லும் போது இமாம் மஹ்தி(அலை) அவர்கள் விழித்திருக்கக் கண்டேன். நான் தூங்கி எழுந்த போதும் அவர்கள் விழித்திருக்கக் கண்டிருக்கிறேன். இந்த அளவுக்கு உழைத்ததால் அவர்களுக்கு கடுமையான இருமல் வந்துவிட்டது.

அந்நாட்களில் நான்தான் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு மருந்துகளெல்லாம் குடிக்கக் கொடுத்து வந்தேன். மருந்து கொடுப்பது என் பொறுப்பாக இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இருமலுக்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதிலிருந்து அவர்களை தடுத்தும் வந்தேன்.

ஒருநாள் ஒருவர் அவர்களுக்கு வாழைப்பழத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். இமாம் மஹ்தி (அலை) வாழைப்பழத்தை சாப்பிட விரும்பினார்கள். ஆனால், உங்களுக்கு இருமல் இருக்கிறதே. நீங்கள் ஏன் வாழைப்பழம் சாப்பிடுகிறீர்கள் என்று கூறி நான் தடுத்ததும், அவர்கள் புன்சிரித்து வைத்துவிட்டார்கள். சுருக்கமாக நான் டாக்டர்களின் ஆலோசனைப்படி செயல்படச் சொன்னேன்; எனவே அவர்கள் என் பேச்சைக் கேட்டார்கள்.

இதே நாட்களில் கலீபா ரஷீதுத்தீன் சாஹிப் இமாம் மஹ்தி(அலை) அவர்களுக்காக பிரான்ஸில் உள்ள ஆப்பிள் கொண்டு வந்தார்கள். அது எந்த அளவுக்கு புளிப்பாக இருந்ததென்றால் இருமல் இல்லாதவர்களுக்கும் இருமல் வந்துவிடும். ஆனால் இமாம் மஹ்தி(அலை) அவர்கள் அதனை வெட்டி சாப்பிட ஆரம்பித்தார்கள். நான் தடுத்தும் கேட்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த அளவுக்கு உங்களுக்கு இருமல் இருந்தும் நீங்கள் புளிப்பான ஆப்பிளை சாப்பிடுகின்றீர்களே என நான் அங்கலாய்த்துக் கொண்டேன். ஆனால் அவர்களோ பொருட்படுத்தவேயில்லை. ஆப்பிளை வெட்டி வெட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆப்பிளைத் தின்று விட்ட பிறகு கூறினார்கள்; இருமல் சரியாகிவிட்டது. இப்போது எந்தவிதமான பத்தியமும் இருக்கத் தேவையில்லை என்று எனக்கு இல்ஹாம் இறங்கியுள்ளது உனக்குத் தெரியாது. அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்தவனாய் நான் ஆப்பிளை அது புளிப்பாக இருந்தபோதிலும் சாப்பிட்டு விட்டேன் என்றார்கள். அவ்வாறே இதற்குப் பிறகு அவர்களுடைய இருமல் சரியாகிவிட்டது. எவ்வித தொல்லையும் ஏற்படவில்லை.

சில நேரங்களில் காரணிகள் உபயோகிக்கப்படுவது ஏன்?

சில நேரங்களில் அடியார்கள் மூலமாகக் காரணிகள் ஏன் உபயோகிக்கப்படுகிறது? காரணிகளின்றியே ஏன் வேலைகள் நடைபெறுவதில்லை என்றொரு கேள்வி இங்கு எழுகிறது.

இதுபற்றி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை என்னவெனில்:

1. காரணிகளின்றியே எப்பொழுதும் வேலை நடைபெருவதென்றால் நற்கூலியைப் பெறுவதற்கு கட்டாயத் தேவையாக இருக்கின்ற மறைவானவற்றின் மீதான நம்பிக்கை என்பது வீணாகிவிடும். அதுமட்டுமின்றி அடியாரின் செயலும் இறை கருணையை ஈர்க்கக் கூடியதாகவே இருக்கிறது. எனவே ‘விதியும்’ இருக்கிறது; அத்துடன் இறை கருணையை ஈர்ப்பதற்காக இறைவன் காரணிகளையும் உபயோகிக்க வைக்கிறான்.

தக்தீரின் பாதையில் காரணிகள் ஒரு தடையாக இருக்கவும் முடியாது; இருப்பதுமில்லை. எனினும் அடியாரின் பலவீனம் மற்றும் இயலாமை இறை கருணையை ஈர்ப்பதற்கு ஒரு வழிகோலாக இருக்கிறது.

2. காரணிகளைக் கையாளுமாறு இட்ட கட்டளையின் ஒரு நோக்கம் அடியாருக்கு தன் முயற்சியின் பலவீனங்களைத் தெரியப்படுத்துவதுமாகும். காரணிகளின்றியே வேலை நடைபெற்றால். நான் இந்த வேலையைச் செய்தால் எப்படிச் செய்திருப்பேனோ? தெரியவில்லையே என மனிதன் பலமுறை யோசிப்பான்.

ஆனால் அவன் கூடவே செயல்படவும் செய்யும்போது தன் முயற்சி மிக பலவீனமானது என்பதும் அதற்கு எதிராக அல்லாஹ்வின் அருள் எந்த அளவுக்கு வேலை செய்துள்ளது என்பதும் அவனுக்குத் தெரியவரும்.

சுருக்கமாக, முயற்சி மனிதனுடைய ஈமானை வலுப்படுத்துகிறது. இந்த வேலை நம் பொறுப்பில் மட்டும் இருந்தால் நமது முயற்சி இதுவரைதான் எட்டியிருக்கும்; கடைசியில் நான் தோல்வியைக் காண நேர்ந்திருக்கும் என மனிதன் பார்த்துக் கொண்டே செல்வான். இல்லையெனில் தக்தீர் என்பது அவனுக்கு சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகத் தோன்றும்; அத்துடன் சோம்பேறித்தனமும் அதிகமாகிவிடும்.

காரணப் பொருள்களைப் பயன்படுத்துதல் என்பது பற்றி நான் ஓர் உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். நபி (ஸல்) அவர்கள் வெற்றி பெறுவார்கள்; அவர்களின் விரோதிகள் தோல்வியடைவார்கள் என்று தக்தீர் இறங்கியிருந்தது. எந்தவொரு காரணியும் இன்றி மக்கள் தத்தமது வீடுகளில் உட்கார்ந்து கொண்டே நோய்வாய்ப்பட்டு மரணித்திருந்தால் இது தற்செயலாக நிகழ்ந்த ஒன்று; மக்களாகப் பிறந்தவர்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று அனைவரும் கூறிவிடுவர். ஆனால் இறைவனோ (அவ்வாறே கூற வழியில்லாத வகையில்) இந்த தக்தீரை (விதியை) காரணிகளின் மூலம் வெளிப்படுத்தி தன் வல்லமைக்கு சிறந்த சான்றினை வழங்கியுள்ளான்.

பத்ர் போரில் நடந்த ஒரு சம்பவம் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. அப்துல் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) கூறுகின்றார்கள்; இன்று எதிரிகளை எதிர்த்துப் போரிட்டு வெல்ல வேண்டும் என என் மனம் விரும்பியது. (ஏனெனில் காபிர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெறுகின்ற முதல் போராகும் அது. அதில் ஒருபுறம் இறைவனும், அவனது தூதரும் இருந்தார்கள். முஸ்லிம்களுக்கு காபிர்கள் செய்த அநியாயங்கள் ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்தன). போரில் வலப்புறமும் இடப்புறமும் ஆற்றல் மிக்க போர் வீரர்கள் இருந்தால்தான் ஒரு போராளியால் நன்கு போரிடமுடியும் என்பது எல்லோரும் அறிந்ததே.

நானும் எனது வலப்புறத்தையும் இடப்புறத்தையும் பார்த்தேன். எனது மன வேதனைக்கு அளவேயில்லை. ஏனெனில் நான் என் இருபக்கத்திலும் 14-15 வயதினைக் கொண்ட அன்ஸார்களைச் சார்ந்த இரு சிறுவர்களைக் கண்டேன். அவர்களைப் பார்த்ததுமே இன்று நாம் எப்படி போரிடப் போகிறோம்? என என் உள்ளத்தில் தோன்றியது. இந்த எண்ணம் என் மனதில் தோன்றியதுதான் தாமதம். அவ்விரு சிறுவர்களில் ஒருவன் என்னை முழங்கையால் இடித்தான். அடுத்தவன் கேட்டு விடக்கூடாதே என்பதற்காக என் காதில் மிக மெதுவாகக் கேட்டான் சித்தப்பாவே! அபூஜஹல் என்பவன் யார்? அவனைக் கொன்று விடவேண்டும் என மனம் நாடுகிறது. ஏனெனில் அவன் அல்லாஹ்வின் தூதருக்கு மாபெரும் கொடுமையிழைத்துள்ளான் என்றான்.

அவனுடைய பேச்சைக் கேட்டு நான் வியப்படைந்தேன். ஏனெனில் இந்த எண்ணம் எனக்குக் கூடத் தோன்றவில்லை. அச்சிறுவனின் இந்த பேச்சை நான் கேட்டு முடிப்பதற்குள் இன்னொரு சிறுவன் மறுபுறம் முழங்கையால் என்னை இடித்தான். அடுத்தவன் கேட்டுவிடக் கூடாதே என்பதற்காக அவனும் ‘சித்தப்பாவே! அபூஜஹில் யார்? அவன் நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமாக அநீதியிழைத்துள்ளான் என கேள்விப்பட்டிருக்கிறேன்’ என கூறினான். இதனைக் கேட்ட பிறகு நான் இன்னும் அதிக வியப்பிற்காளானேன்.

நான் அபூஜஹிலின் பக்கம் சுட்டிக் காட்டியதும் அவனைச் சுற்றி மாபெரும் வீரம் மிக்க போர் வீரர்கள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தும் அச்சிறுவர்கள் அதனையும் பொருட்படுத்தாது பாய்ந்து சென்று அபூஜஹிலின் மீது தாக்குதல் புரிந்தனர். நாலாப் புறத்திலுமிருந்து வந்த வாளின் தாக்குதலிலிருந்து தம்மைக் காத்துக் கொண்டவர்களாய் அபூஜஹிலை அடைந்தே விட்டார்கள். மேலும் அவனைக் காயப்படுத்தி கீழே தள்ளிவிட்டார்கள்.

காபிர்களை அழித்தொழிப்பதற்காக போரை ஏற்படுத்தியதும், அவர்களை எதிர்த்து முஸ்லிம்கள் போரிடுவதும் ஒரு காரணியாக இருந்தது என்பது இச்சம்பவத்திலிருந்து தெரிய வருகிறது. ஆயினும் இந்த முயற்சியின் பலவீனமே நபி (ஸல்) அவர்களுக்காக இறைவன் வெளிப்படுத்திய அந்த தக்தீரின் மகிமையை எடுத்துக் காட்டுகிறது.

ஆனால் இந்த முயற்சி இல்லாதிருந்தால் இந்த தக்தீரின் மகத்துவம் இந்த அளவுக்கு வெளிப்படிட்டிருக்காது. மேலும் நபித்தோழர்களுக்கு தமது பலவீனம் மற்றும் அல்லாஹ்வின் மகிமை பற்றி இப்போது தெரிந்து கொண்டது போன்று தெரிந்திருக்க முடியாது. உண்மையில் அவர்கள் தமது வாள்களிலேயே இறைவனுடைய பளிச்சிடும் வாளைக் கண்டு கொண்டார்கள். 13, 14 வயது சிறுவர்களால் எவ்வாறு அபூஜஹிலைக் கொல்ல முடியும்? ஆனால் அவர்கள் கொன்றனர். இந்தப் போரில் கொல்லப்பட்ட மற்றவர்களின் நிலையும் இதுவேயாகும். இந்தக் காரணத்தினாலேயே இந்தப் போரைப் பற்றி, ‘எனவே அவர்களை நீங்கள் கொல்லவில்லை; மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான்’ என்று இறைவன் கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 8:18)

பின்னர் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அல்லாஹ் கூறினான்:

“நீர் எறிந்தபோது நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். (திருக்குர்ஆன் 8:18)

நிராகரிப்பாளர்களின் மீது மண்ணை எறிந்தது நபி (ஸல்) அவர்கள்தான் என்றாலும் அப்போது காற்றை மிக வேகமாக அடிக்கச் செய்தது இறைவனே; அவன்தான் எதிரிகளை போர் செய்ய முடியாதவாறு ஆக்கிவிட்டான். ஆகவே அந்த செயல் இறைவன் செய்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தக்தீர் (இறைநியதி) வெளியாகும்போது சில சமயங்களில் காரணிகள் ஏதும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காகவே காரணிகள் வைக்கப்படுகின்றன.

3. மூன்றாவது, தக்தீர் (விதி) விதிக்கப்பட்டிருந்தாலும். அத்துடன் காரணிகளைப் பயன்படுத்துவதற்கும் கட்டளை இடப்படுகிறது. மனிதனுக்கு உழைப்பு, முயற்சி ஆகியவற்றிற்கு கூலி கொடுப்பதற்காக அவ்வாறு செய்யப்படுகிறது. உதாரணமாக நபித் தோழர்களின் வெற்றியை போர் எனும் காரணிகளுடன் தொடர்புபடுத்தியதனால் அவர்களுக்கு போர் செய்வதற்கான நற்கூலியும் கிடைத்தது. போர் செய்யாமலேயே வெற்றி கிடைத்திருந்தால் இந்த நற்கூலி எங்கிருந்து கிடைத்திருக்கும்.

(நபித் தோழர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற) இந்த தக்தீருக்கு நபி (ஸல்) அவர்களின் தோழர்களுடைய வாளின் தேவை இல்லையென்றாலும் அந்த தக்தீருடன் செயல்படுவதற்கான தேவை சஹாபாக்களுக்கு இருந்தது. அப்போதுதான் நற்கூலி அவர்களுக்குக் கிடைக்க முடியும்.

இவையே தக்தீருடன் காரணிகளைக் கையாள்வதற்கான முப்பெரும் காரணங்களாகும்.

இப்போது எழும் கேள்வி என்னவென்றால், தக்தீரில் சில நேரங்களில் காரணிகளைக் கையாள்வது தடுக்கப்படுகிறது? அது ஏன்? என்பதாகும்.

இது தொடர்பாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவெனில், இறைவன் சில நேரத்தில் எவ்வித காரணிகளும் இன்றி தக்தீரை (இறை நியதியை) வெளிப்படுத்தி அதன் மூலம் அவன் நம்பிக்கை கொண்டவர்களுக்கு தன் மகிமையையும் மகத்துவத்தையும் காட்ட விரும்புகின்றான். அவனது ஆற்றலுக்கு முன்னால் அனைத்து காரணிகளும் வீணானவை; இறைவன், தான் விரும்பியதைச் செய்து காட்டுகிறான் என்பதை உணர்ந்து கொள்வதற்காகவே அவன் அவ்வாறு செய்கிறான்.