அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Sunday, December 20, 2015

விதியின் வெளிப்பாடு

தக்தீர் எத்தனை வகை என்பதை அறிந்த பின்னர், சிறப்பான தக்தீர் வெளிப்படுவதற்கு மூலகாரணங்கள் உள்ளன என்பதை அறிவது அவசியம், இதனைப் புரிந்து கொள்ளாத காரணத்தினால்தான், நாம் செய்வதெல்லாம் இறைவன் செய்ய வைப்பதுதான் என்று சிலர் கூறத் தொடங்கி விட்டனர். இறைவன் ஒருவரை வலுக்கட்டாயமாக ஒன்றைச் செய்ய வைப்பதில்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. இறைவனின் சிறப்பான விதிகள் இறங்குவதற்கு குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன. இந்த ஏமாற்றம் உண்மையில் கர்வத்தினால் ஏற்பட்டதாகும். அப்படிப்பட்டவர்கள், நாமும் சிறப்பானவர்கள்தாம். நம்மையும் இறைவன் வேலை செய்ய வைக்கிறான்
என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இறைவனின் குறிப்பட்ட சில கட்டளைகள் குறிப்பிட்ட சிலருக்காகவே வெளிப்படுகின்றன. அவர்கள் குறிப்பான முறையில் நல்லவர்களாக இருந்தாலும் சரி – அல்லது குறிப்பான முறையில் தீயவர்களாக இருந்தாலும் சரியே.

சிறப்பான விதியின் விளக்கம்

விதியின் வகைகளை சுருக்கமாக எடுத்துரைத்ததேன். இப்போது அவற்றை கொஞ்சம் விளக்கமாக கூறுகிறேன். ‘தக்தீரே ஆம்’ எனும் சாதாரண விதி குறிப்பிட்ட சட்டங்களின்படி நடைபெறுகிறது. எனவே அது பற்றி விளக்கத் தேவையில்லை. தக்தீரே காஸ் (சிறப்பான விதி) பற்றி மட்டும் விளக்கிக் கூறுவதே போதுமானது.

தக்தீரே காஸ் இருவகைப்படும் 1. அவற்றில் சில அடிப்படைச் சட்டங்களின்படி இறைவன் புறமிருந்து கட்டளைகள் பிறக்கின்றன. உதாரணமாக, நபியும், நபியுடைய ஜமாத்தும் தமது எதிரிகளின் மீது வெற்றி கொள்வார்கள் என்று இறைவன் நிர்ணயித்துள்ளான். திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.

நிச்சயமாக நானும் எனது தூதர்களும் வெற்றி பெற்றே தீருவோம் என அல்லாஹ் விதித்துள்ளான். (58:22)

மேலும் கூறுகிறான். நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவுவது நிச்சயமாக எமது கடமையாக இருக்கிறது. (30:48)

இதன்படி இறைதூதர்கள் மற்றும் அவர்களது ஜமாத்துகள் தமது எதிரிகளை வெற்றி கொள்வதை சாதாரண மார்க்க சட்டத்தின்கீழ் குறிப்பிட முடியாது. ஏனெனில் இது சிறப்பான அடிப்படைச் சட்டத்தின்கீழ் உள்ள சிறப்புக் கட்டளையாகும். சிலநேரத்தில் இயற்கை விதிகள் அதற்கு மாற்றமாகவே இருக்கின்றன.

2. இரண்டாம் வகை: குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட நபருக்காக வெளியாகும் சிறப்பான விதிகள், மேலும் இவை ஏதாவது அடிப்படைச் சட்டத்தின்கீழ் வெளியாவதில்லை. இதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மக்கா வெற்றி குறித்த வாக்குறுதியை எடுத்துக்காட்டாக கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் எதிரிகளை வெற்றி கொள்ளுதல் என்பது பொதுவான சட்டத்தின் அடிப்படையில்தான் விதிக்கப்பட்டிருந்தது என்றாலும் நபியாக இருப்பவர் தம் ஊருக்கு மன்னராகவும் ஆக வேண்டும் என்று இறைவன் சட்டம் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குதாம் முதலில் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் (இடம் பெயர்ந்து செல்ல) செய்ய வேண்டும் என்றும், பிறகு மக்காவை வென்று அதன் மன்னராக வேண்டும் என்றும் குறிப்பாக கட்டளையிடப்பட்டிருந்தது. இது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காக மட்டும் இருந்த சிறப்புக் கட்டளையாகும்.

இக்கட்டளை பிறந்த பின்னர் உலகம் என்ன செய்தாலும் சரியே – முழு உலகமும் சேர்ந்து அவர்களை மக்காவின் மன்னராக ஆகுவதிலிருந்து தடுக்க விரும்பினாலும் அவர்களைத் தடுக்க முடியாது.

திருட்டை இறைவன் செய்ய வைக்கிறான் என்று அறிவற்றவர்கள் கூறுகின்றனர். நாம் கூறுகிறோம்: திருட்டையாவது மக்களால் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் இறைவன் எதை செய்ய வைக்கிறானோ அதனை யாரும் தடுத்து நிறுத்தவே முடியாது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது இவ்வாறு வஹி இறங்கியது:

“இந்தக் குர்ஆ(னின் போதனையி)னை உமக்குக் கடமையாக்கியவன் (உம்முடைய) திரும்புமிடத்திற்கு உம்மை நிச்சயமாக கொண்டுவருவான்.” (28:86)

இதில் இரண்டு முன்னறிவிப்புகள் இருந்தன. ஒன்று மக்காவிலிருந்து வெளியேற வேண்டிவரும்; இரண்டாவது, மீண்டும் திரும்பி வர வேண்டியது வரும். அவ்வாறே நடந்தது. எவராலும் அதனைத் தடுக்க முடியவில்லை.

இவ்வாறே ஹஸ்ரத் மூஸா(அலை) அவர்களுக்காகவும், ‘அவரது எதிரிகளின் சந்ததிகள் அனைவரும் கொல்லப்படவேண்டும்’ என்ற தக்தீரே காஸ் (சிறப்பு விதி) வெளிப்பட்டது. ஆக நபிமார்கள் வெற்றி பெறுவார்கள் என்பது பொதுவிதியாகும். ஆனால், இவர் எவ்வாறு வெற்றியடைவார்: அவர் எவ்வாறு வெற்றியடைவார் என்பது சிறப்பு விதியாகும்.

இவ்வாறே ‘காதியான் முன்னேற்றமடையும்’ என இறைவன் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு வக்குறுதியளித்தான். மேலும் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் காதியான் பத்துமைல் தூரம் வரை பரவிக் கொண்டே செல்லும் என்று கூறியிருக்கிறார்கள். இன்று சொற்பொழுவு நடந்து கொண்டிருக்கும் இந்த இடம் (அதாவது மஸ்ஜித் நூர் இருக்கும் இடம்) இதற்கு முன்னர் சொற்பொழிவு நடந்து வந்த இடத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நபிமார்கள் வெற்றி பெறுவது சில அடிப்படைச் சட்டங்களின் கீழ் நடைபெறும் ஒரு பொது விதியாகும். ஆனால் அவர்கள் வெற்றி பெரும் முறை ஒரு சிறப்பு விதியாகும். அச்சிறப்பு விதி ஒவ்வொரு காலத்தின் நிலைமைக்கேற்ப மாறுபடக் கூடியது. அது ஒரு குறிப்பிட்ட விதிமுறையின்படி வெளியாகுவதில்லை. உதாரணமாக, இமாம் மஹ்தி (அலை) அவர்கள் வாழ்ந்து வந்த இடத்தை விரிவுபடுத்த வேண்டும் என கட்டளையிடப்பட்டதென்றால் அதற்க்குக் காரணம். இன்றைய காலத்தில் பெரும் பெரும் நகரங்கள் உருவாகுவது வழக்கமாகிவிட்டது. பெரிய நகரம் என்பது உலகின் புதுமை ஆகிவிட்டது. எனவே இறைவன் இக்காலத்திற்கென்று இந்தச் சிறப்பு விதியையே வெளிப்படுத்தியிருக்கிறான்.

தக்தீருக்கு அதன் காரணிகளுடன் உள்ள தொடர்பு

தக்தீர் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை நான் இப்போது கூறுகிறேன். இறைவன் ஒருவரைப் பற்றி ‘எரிந்துவிடு’ என்று கூறுகிறான் என்றால் அவர் அப்படியே எரிந்துவிடுகிறாரா? அங்கேயே அவரை நெருப்பு பற்றிக்கொள்ளுமா? அல்லது அதற்கு வேறு ஏதாவது காரணிகள் வெளியாகின்றனவா?

விதிக்கு காரணிகளுடன் உள்ள தொடர்பு பலவைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

1. காரணிகளுடனேயே வெளியாகும் விதி. பொதுவான இயற்கை விதி எப்பொழுதும் இவ்விதமே வெளியாகின்றது. எடுத்துக்காட்டாக, தீ எரிதல். தீ எரிகிறதென்றால், தீயை உருவாக்கவேண்டும் என்ற சிறப்புத்தன்மையை இறைவன் எப்பொருளில் வைத்துள்ளானோ அப்பொருள் இருக்கும்போதுதான் தீ எரியும். உதாரணமாக எரியும் ஆற்றல் பெற்ற பொருளுடன் நெருப்பை வைத்தல், அல்லது இருபொருள்களோ அல்லது இரு பொருள்களில் ஒன்றோ எரியக்கூடிய தகுதியைப் பெற்றிருந்து அவற்றுள் உராய்வு ஏற்படும்போது தீ எரியும்.

சிறப்பு விதிகள் இருவிதத்தில் வெளியாகின்றன.

1. அதனுடன் காரணிகள் சேர்ந்திருக்கும்போது

2. அதனுடன் காரணிகள் சேராமல் இருக்கும்போது

காரணிகளுடன் சேர்ந்து வெளியாகும் சிறப்பு விதி பலவிதங்களில் வெளியாகின்றது.

1. காரணிகள் தென்படுகின்றன. இதற்கு இவையே காரணிகள் என்பது தெளிவாகத் தெரியும். மேலும் இவற்றில் தக்தீரின் அம்சம் மிகவும் மறைவாக இருக்கும். இவை அடுத்து இன்னும் பலவிதமாக வெளியாகின்றன.

2. தீய காரணிகளுக்கு எதிராக நல்ல காரணிகள் உருவாகின்றன. உதாரணமாக, கிராமத்தில் வசித்துவரும் ஒருவரை அங்குள்ள பிரசித்தி பெற்றவர் விரோதம் காரணமாக துன்புறுத்தி வருகிறார். அப்போது இறைவன் ஏதோ ஒரு காரணத்தால் (என்ன காரணம் என்பதை பின்னர் எடுத்துரைப்பேன்) அந்த நபருக்கு துன்பம் ஏற்படக் கூடாது என்று தீர்மானித்துள்ளான் என்றால் அதற்குரிய வழி, தாசில்தாரின் உள்ளத்தில் அந்த நபரைப் பற்றிய அன்பை இறைவன் ஏற்படுத்தி விடுவான். இதனால் தாசில்தார் அந்த நபருடன் நண்பனைப் போல் நடந்து கொள்ள ஆரம்பித்துவிடுகிறார். இதனைப் பார்த்த பிரசித்தி பெற்றவர், ‘இந்த நபருக்கு தாசில்தாருடன் தொடர்பிருக்கிறது, தன்மீது வழக்கு ஏதும் போட்டுவிடக் கூடாது என்று பயந்து அவரை எதிர்ப்பதிலிருந்து விலகிக் கொள்வார்.

2. தீய காரணிகளே நல்ல காரணிகளாக ஆகிவிடுதல், உதாரணமாக, ஒரு நபரின் எதிரி அவரோடு பகைமை கொண்டு அவரை நஷ்டத்திற்குள்ளாக்க விரும்புகிறார். இறைவன் சில காரணிகளை ஏற்படுத்தி விடுகின்றான். இதனால் அந்த எதிரி நண்பராகிவிடுகிறார். ஹென்றி மார்டின் கிளார்க் என்பவரின் வழக்கில் இமாம் மஹ்தி (அலை) அவர்களுடன் இவ்வாறே நடந்தது. அப்போது குர்தாஸ்பூர் மாவட்ட டெபுடி கமிஷனராக கேப்டன் டக்லஸ் இருந்தார். ஆரம்பத்தில் இவர் மிகவும் காழ்ப்புணர்ச்சி கொண்டவராக இருந்தார். அவர் குர்தாஸ்பூர் வந்ததும், இங்கு ஒருவர் மஸீஹ் மஹ்தி என வாதம் செய்கிறாரே அவரை ஒடுக்க எந்த ஏற்பாடும் இதுவரை செய்யப்படவில்லையா? என பலரிடம் அவர் கேட்டார். அப்படிப்பட்டவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்; ஏனெனில் அப்படிப்பட்ட வாதம் அமைதியைக் குலைக்கக் கூடியது என்றெல்லாம் கூறினார்.

இந்த வழக்கு முக்கியமானதாக இருந்ததால் அவர் இருக்கும் நீதிமன்றத்திலேயே எடுத்து வைக்கப்பட்டது. அவர் ஏற்கனவே தமக்கிருந்த குரோதமனப்பான்மையினால் வாரண்ட் மூலம் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களைக் கைது செய்யுமாறு கட்டளையிட விரும்பினார். ஆனால் போலீஸ் அதிகாரிகளும் அவரின் கீழ் வேலை செய்தவர்களும், மிர்ஸா சாஹிப் மாபெரும் மதிப்பிற்குரிய ஒரு ஜமாத்தின் தலைவராவார். அவரோடு இவ்வாறு நடந்து கொள்வது குழப்பத்தை ஏற்ப்படுத்தும். எனவே முதலில் சாதாரணமான முறையில் கூப்பிட வேண்டும். பின்னர் வழக்கின் நிலைமைகளைக் கண்டுணர்ந்த பிறகு நீங்கள் விரும்பும் கட்டளையை இடுங்கள் என ஆலோசனைக் கூறவே, அவர்களின் ஆலோசனையின்படியே இமாம் மஹ்தி (அலை) அவர்களை அழைத்துவர ஒரு போலீஸ் அதிகாரி அனுப்பப்பட்டார். அந்த போலீஸ் அதிகாரி ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களைத் தம்முடன் கூட்டிச் சென்றார்.

இதுவரை இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு ஏன் தண்டனை கொடுக்கப்படவில்லை என்று கேட்ட அதே அதிகாரியின் உள்ளத்தில் இறைவன் ஒரு மாறுதலை ஏற்படுத்திவிட்டான். இமாம் மஹ்தி (அலை) அவர்களை தன் அருகில் உட்கார வைத்தார். நீதிமன்றத்தில் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் சென்றதும் எழுந்து நின்று கை குலுக்கினார். மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டார்.

சில தந்திரக்கார மனிதர்கள் முதலில் வெளிப்படையாக இவ்வாறுதான் அன்பாகப் பழகுவார்கள். ஆனால் இறுதியில் நஷ்டத்தை ஏற்படுத்திவிடுவார்கள். அதுபோலதான் இந்த அதிகாரியும் செய்திருக்கிறார் என எவராவது கூறக் கூடும். ஆனால் அடுத்து என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். வழக்கு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வழக்கில் ஆங்கிலேய பாதிரி இருந்தார். வழக்கும் சாதாரண வழக்கல்ல; கொலை வழக்காக இருந்தது. (இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ஒருவரை கொலை செய்துவிட்டார் என்பது குற்றச்சாட்டு.) சாட்சிகள் தயார் படுத்தப்பட்டிருந்தன. குற்றம் சாட்டியவர் தாம் கூறும் குற்றம் உண்மையானதே என வாதிட்டார். இப்படியெல்லாம் இருந்தும் விசாரணையைக் கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கு உண்மையாது என்று என் மனசாட்சி சொல்லவில்லை’ என்று கூறினார். அவருடைய உள்ளத்தை ஆட்கொண்டிருந்தது யார்? என்பதை நீங்களே இப்போது கூறுங்கள். இறைவன்தான். இல்லையென்றால் கேப்டன் டக்லஸின் சொந்த தீர்ப்பாக இருந்தால் வெளிப்படைக்கு ஏற்றவாறு அமைந்திருக்க வேண்டும்.

ஆனால் வெளிப்படையான முறையில் அனைத்து விஷயங்களும் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு எதிராக பெற்றிருந்தும் அந்த கேப்டன் போலீஸிடம், ‘உண்மை என்ன என்று அந்த குற்றம் சாட்டுபவரிடம் சென்று கேள்' என கட்டளையிடுகிறார். நான் கூறியதே சரியானது என குற்றம் சாட்டுபவர் (வாதி) கூறுவதாக போலீஸ் அதிகாரி வந்து கூறினார். இதனை என் உள்ளம் நம்பவில்லை என்று கேப்டன் டக்லஸ் கூறுகிறார். இதனைக் கண்ட கேப்டன் போலீஸுக்கு ஒன்று தோன்றியது. குற்றம் சாட்டுபவரை (வாதியை) பாதிரிகள் மத்தியில் வைப்பதற்குப் பதிலாக போலீஸ் காவலில் வைக்க வேண்டும். அப்போதுதான் சூழ்ச்சிகள் பற்றிய சந்தேகம் இல்லாமல் இருக்கும் என போலீஸ் கூற, அவ்வாறே செய்யப்பட்டது. போலீஸ் காவலில் வைத்து அவனை விசாரித்ததும் குற்றம் சாட்டியவர் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் காலடியில் விழுந்தார். எல்லா உண்மைகளையும் தெரிவித்துவிட்டார். எனக்கு ஒரு பதிரிதான் இவ்வாறெல்லாம் சொல்ல கற்றுக் கொடுத்தார்; அந்த பாதிரி சிக்கவைக்க விரும்பிய சில அஹ்மதிகளின் பெயர்கள் எனக்கு நினைவில்லாமல் போனால், நீதிமன்றத்தில் என் உள்ளங்கைகளைப் பார்த்து நினைவூட்டிக் கொள்வதற்காக அந்த பாதிரி என் உள்ளங்கைகளில் பேனாவால் எழுதிக் கொடுத்தார் என்று தெளிவாக அந்த வாதி கூறிவிட்டார்.

இவ்வாறே இறைவன் ஒருபுறம் ஒரு குற்றவாளியின் உள்ளத்தை மாற்றி அவருடைய வாயினாலேயே உண்மையைக் கூற வைத்தான். அதே சமயத்தில் மறுபுறம் டெபுடி கமிஷனரின் உள்ளத்தையும் மாற்றி விட்டான். முதலில் எதிரியாக இருந்த அவர் ஆதரவாளராக மாறிவிட்டார். இமாம் மஹ்தி (அலை) அவர்கள் நிரபராதி எனத் தீர்ப்பளித்துவிட்டார். நீங்கள் விரும்பினால் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்களின் மீது நீங்கள் வழக்குத் தொடுக்கலாம் என்றும் கூறினார். இது ‘தக்தீரே காஸ்’ (சிறப்பு விதி) ஆகும். ஆனால் எப்படி வெளிப்பட்டது? எப்படியென்றால், தீய காரணிகளை இறைவன் நல்ல காரணிகளாக மாற்றிவிட்டான். தண்டனை கொடுக்கவேண்டும் என எண்ணியவரே, இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மீதுள்ள இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் என்பதை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறினார்.

3. தக்தீர் வெளியாவதற்கான மூன்றாவது முறையாவது, தீய காரணிகளின் தீய விளைவிலிருந்து வேறொரு காரணிகள் உருவாக்கப்பட்டு அவற்றின் மூலமாகவே காப்பாற்றுதலாகும். உதாரணமாக, ஒருவர் இன்னொருவரைக் கொல்லவேண்டும் என்பதற்காக அவருடைய வீட்டிற்கு செல்கிறார்; அவர் மீது வாளையும் வீசுகிறார். ஆனால் வாள் குறி தவறி விடுகிறது அல்லது இடையில் வேறொருபொருள் குறிக்கிட்டுவிடுகிறது. அதனால் அவர் அதிலிருந்து காப்பாற்றப்படுகிறார். இச்சம்பவத்தில் தீய காரணிகள் தீயவையாகவே இருந்தன. அவை நல்ல காரணியாக மாறி விடவில்லை. ஆனாலும் அதன் தீயவிளைவிலிருந்து மனிதன் தப்பித்து விட்டான்.

4. நான்காவது, தக்தீர் இவ்வாறும் வெளிப்படுகிறது. தீய காரணிகளுக்கு எதிராக நல்ல முயற்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. உதாரணமாக, எதிரி தாக்குகிறான். அவனுடைய தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்குள்ள ஒரு வழி நான் முன்னர் கூறியதைப் போன்று, இறைவன் வேறொரு ஆற்றல் வாய்ந்த மனிதனை அவரைக் காப்பாற்றுவதற்காக ஏற்படுத்திவிடுவதாகும். மற்றொரு வழி என்னவெனில், அவருக்கே தமது எதிரியை எதிர்க்கும் ஆற்றல் வழங்கப்படுவதாகும். இவ்வாறு நன்முயற்சிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு எதிராக ஒன்று கூடிய தீய காரணிகளின் தீய விளைவுகளிலிருந்து அவர் காப்பாற்றப்படுகிறார்.

இந்த நான்கு முறைகளிலும் காரணிகளைக் கொண்டே பொதுவிதியை அகற்றிவிடுவதன் மூலம் சிறப்பு விதி வெளியாகின்றது. மேலும் அக்காரணிப் பொருட்கள் கண்ணுக்குப் புலனாகவும் செய்கின்றன.