அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Monday, December 14, 2015

தீமை செய்வதிலிருந்து இறைவன் ஏன் தடுப்பதில்லை?


இந்த மனிதர் இந்த நேரத்தில் இந்த தீயவேலையை செய்வார் என்று இறைவனுக்குத் தெரிந்திருக்கும்போது அவன் ஏன் அந்த மனிதரைத் தடுப்பதில்லை? என்ற கேள்வி இங்கு எழுகிறது.

உதாரணமாக, இந்த மனிதர் திருடுவார் என்பது இறைவனுக்குத் தெரிந்திருக்கிறது என்றால், திருடுவதிலிருந்து அவரை அவன் ஏன் தடுப்பதில்லை?

சுந்தர் சிங் என்ற கொள்ளையடிப்பவர் ஒருவர் நம்மிடம் வந்து, நான் இந்த

நேரத்தில் ஜீவன்லால் என்பவரின் வீட்டில் கொள்ளையடிப்பேன் என்று கூறுகிறார். இதனை அறிந்திருந்த போதிலும், நாம் பேசாமல் அமைதியாக இருப்போமேயானால் நாம் குற்றவாளியாவோமா இல்லையா? மார்க்க, நல்லொழுக்க, சமுதாய மற்றும் நாட்டின் சட்டத்தின்படி நாம் கண்டிப்பாக குற்றவளியாவோம். நமக்காவது ஜீவன்லால் வீடு இந்த நேரத்தில் கொள்ளையடிக்கப்படும் என்பதை அவரிடம் சொல்ல முடியாத அளவுக்கு வேறு வேலைகள் இருக்கலாம் அல்லது நாம் அவரிடம் சொல்லிவிட்டால் கொள்ளையடிப்பவர்கள் நம்மைக் கொன்று விடுவார்கள் என்ற அபாயம் இருக்கலாம். இவ்வாறு கொள்ளையடிப்பவரின் அந்த எண்ணத்திலிருந்து அவரை தடுத்து நிறுத்துவதற்கு நமக்கு அபாயங்கள் இருப்பினும் நாம் அவரை தடுக்கவில்லையென்றால் சம்பந்தப்பட்டவருக்கு அறிவிப்பு கொடுக்காமலிருந்தால் நாம் குற்றவாளியாவோம். அப்படியிருக்கும்போது, ஆற்றல் உடையவரும், வல்லமை பெற்றவனுமாகிய இறைவனுக்கு யாரைப் பற்றிய பயமும் இல்லை. யாரும் அவனுக்கு நஷ்டமிழைக்க முடியாது. அவன் அறிந்திருந்தும் ஏன் கொள்ளைக்காரனை தடுத்து நிறுத்துவதில்லை என்ற குற்றம் அவன் மீது விழுகிறது. அல்லது ஏன் அவன் கொள்ளை நடக்க வேண்டிய வீட்டுக்காரருக்கு அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இதுபற்றி அறிவிப்பதில்லை?

மனிதனாவது கட்டாயத்திற்குட்பட்டிருக்கலாம், அவ்வாறு கட்டாயத்திற்குட்படுவதற்கு ஏதாவதொரு காரணமும் இருக்கலாம். அப்படியிருந்தும் அவன் (குற்றத்திற்குள்ளாகி) பிடிக்கப்படுகிறான்.

இந்த குற்றச்சாட்டு சிந்தனைக்குறைவால் தோன்றியதாகும், ஏனெனில் இறைவனைப் பற்றி இந்த உதாரணத்தை எடுத்து வைப்பதே தவறாகும். உலகத்தில் மனித படைப்பின் நோக்கத்தைப் புரியாததனாலேயே இந்த உதாரணம் கூறப்பட்டுள்ளது.

அடியார்களுடன் இறைவனுக்குள்ள தொடர்புக்கு சரியான உதாரணம், மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறும்போது கண்காணிப்பாளர் அவர்களைக் கண்காணிப்பது போன்றாகும். தவறாக விடை எழுதும் மாணவனுக்குச் சொல்லிக் கொடுப்பது அவருக்கு ஆகுமானதா? ஆகுமானதல்ல.

ஆகவே சோதனைக்கு ஆளாக்கி அருட்கொடைக்கு வாரிசாக்குவதற்காக மனிதன் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கும்போது, அவன் தவறிழைக்கும்போது நீ இந்த தவறை செய்கிறாய்  என்று அவனிடம் கூறினால் அது எவ்வாறு தேர்வு ஆகும்? அதற்கு கூலி ஏன் கொடுக்க வேண்டும்? தேர்வுக் கூடத்தில் சரியான விடைகளையும், தவறான விடைகளையும் எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களைச் சுற்றி வரும் கண்காணிப்பாளர் போன்ற ஒரு தொடர்புதான் இந்த விஷயத்தில் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கிறது.

எனவே அல்லாஹ்வுக்குத் தெரிந்திருந்தும், அவன் ஒவ்வொருவரையும் தனித்தனியாகத் தடுத்து நிறுத்தாதிருப்பது அவனுடைய மகத்துவத்திற்கு மாறானதல்ல; இன்னும் சொல்லப்போனால், மனிதன் எந்த நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளானோ அந்த நோக்கத்திற்கு முற்றிலும் ஏற்றதாகும்.