அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Thursday, December 10, 2015

தக்தீர் ஈமான் கொள்ள வேண்டிய விஷயங்களுள் ஒன்றாகும்.


எவ்வாறு நபி (ஸல்) அவர்கள் வேறு விஷயங்களை அவசியம் என்று கருதி அதில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவ்விஷயங்களை ஈமான் கொள்ள வேண்டிய விஷயங்களில் உள்ள ஒன்றாக சேர்த்துக் கொண்டார்களோ அவ்வாறே தக்தீரையும் சேர்த்துக் கொண்டார்கள் என்று சிலர் நினைக்கலாம். உதாரணமாக, ‘எவர் பிற சமுதாயத்தினரைச் சார்ந்தவராக தன்னை பறைச்சாற்றிக் கொள்வாரோ – அதாவது ஸய்யத் குடும்பத்தைச் சாராதவராயிருந்து, தன்னை ஸய்யத் என்று கூறுவாரோ அவர் முஹ்மின் ஆகமாட்டார்’ என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிமைக் கொலை செய்வது ‘குப்ர்’ ஆகும் என்றும் கூறியுள்ளார்கள். அவ்வாறே இன்னும் பல விஷயங்களைக் குறித்து, எவர் இவ்வாறு

செய்வதில்லையோ அல்லது எவர் இவ்வாறு செய்வாரோ அவர் நம்பிக்கைக் கொண்டவர் (முஹ்மின்) ஆகமாட்டார் என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். உதாரணமாக பட்டான் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் தம்மை ஸய்யத் என்றோ, முகலாயர் பரம்பரை என்றோ அல்லது பெரிய குடும்பத்தைச் சாராதிருந்து அக்குடும்பத்தைச் சார்ந்தவராக வாதிப்பார் என்றால் அவர் முஹ்மின் ஆக மாட்டார். இதையே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதுபோலவே இறை நியதி (தக்தீர்) பற்றியும் கூறியிருக்கிறார்கள். இதன் பொருள், அதனை நம்ப வேண்டும் நம்பாதிருப்பது பாவமாகும். ஆனாலும் அதனை நம்பாதிருப்பது நம்மை ஈமானை விட்டும், இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடாது என்று சிலர் கருதுகின்றனர்.

இதுபற்றி ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அதாவது, ஈமான் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவு உள்ளனவோ, எவற்றின் மீது ஈமான் கொள்ளாமல் ஒருவர் முஸ்லிமாக ஆக முடியாதோ அவையனைத்தும் திருக்குர்ஆனில் உள்ளன. அவை ஹதீதுகளைச் சார்ந்திருக்கவில்லை. ஏனெனில் ஹதீதுகள் பற்றிய ஞானம் அநுமானத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். உறுதியானவை அல்ல.

எனவே, எந்த விஷயம் ஈமானைச் சார்ந்தது என்பதை அறிவதற்கு நாம் திருக்குர்ஆனின் பக்கம் திரும்ப வேண்டும். எவ்விஷயத்தைப் பற்றி – அதனை ஏற்றுக்கொள்ளாதிருப்பது குப்ர் (நிராகரிப்பு) என்று திருக்குர்ஆனிலிருந்து தெரிய வருகிறதோ அது ஈமான் கொள்ள வேண்டிய விஷயங்களில் அடங்கிய ஒன்றாகும். எவ்விஷயனங்களைப் பற்றி திருக்குர்ஆனில் சாட்சி கிடைப்பதில்லையோ, அவை பற்றி அவற்றிக்காகக் கையாளப்படும் சொற்கள் வலியுறுத்துவதர்க்காக மட்டுமே வந்துள்ளன என்று புரிந்து கொள்ளவேண்டும்.

இப்போது இந்த விதிமுறைப்படி, தக்தீர் (இறை நியதி) மீது ஈமான் கொள்வது பற்றி திருக்குர்ஆனில் என்ன வந்துள்ளது என்று பார்க்கும்போது ஈமான் பின் கத்ர் (இறை நியதியின் மீது நம்பிக்கை கொள்ளுதல்) என்ற வார்த்தையை நாம் அதில் காணாவிட்டாலும், அதன் மீது ஈமான் கொள்ளுதல் அவசியம் என்பது கண்டிப்பாகத் தெரிகிறது.

ஏனெனில் திருக்குர்ஆனில் அல்லாஹ்விடத்தில் நம்பிக்கை கொள்வது எல்லாவற்றையும் விட முதல் கட்டளையாக கூறப்பட்டுள்ளது. மேலும் இறை நியதியின் மீது ஈமான் கொள்ளுதல் என்பது இறைவனின் மீது ஈமான் கொள்வதன் ஒரு பகுதியாகும். தக்தீர் என்பது என்ன? இறைவனுடைய பண்புகள் வெளிப்படுத்துவதற்குப் பெயர்தான் தக்தீர். உதாரணமாக, இறைவன் இருக்கிறான் என்று ஒருவர் நம்பும்போது, அந்த இறைவன் செயல்படுகிறான்; அவன் செயலற்றவனாக இருக்கவில்லை என்றும் நம்பவேண்டியது அவசியம். சுருங்கக் கூறினால் இறைவனிடம் என்ன பண்புகள் இருக்கின்றன என்று நம்பப்படுகிறதோ அவற்றை ஏற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் கத்ரை (இறை நியதியை) நம்புதலாகும். எனவே, அல்லாஹ்விடத்து நம்பிக்கை கொள்வதிலேயே இறை நியதியினிடத்து நம்பிக்கை கொள்வதும் அடங்கும்.

எனவே நபி (ஸல்) அவர்கள் இறை நியதியின் மீது ஈமான் கொள்வது பற்றி வலியுறுத்திக் கூறியிருப்பது மாபெரும் பாவங்களைப் பற்றி எச்சரித்திருப்பதைப் போன்றதல்ல. மாறாக கத்ர் பற்றி கூறியிருப்பதெல்லாம் உண்மையான முறையிலுமாகும்.